சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம் என்று 2022ஆம் ஆண்டை வரவேற்று பாமக பொதுக்குழு தீர்மானம் இயற்றியுள்ளது.
பாமக பொதுக்குழு இன்று பல்வேறு புத்தாண்டுத் தீர்மானங்களை வெளியிட்டு உடன் ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டுள்ளது. அதில் பாமக. தலைமையில் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்க வேண்டுமென மருத்துவர் ராமதாஸ் விரும்புகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து புத்தாண்டுத் தீர்மான அறிக்கையில் பாமக வெளியிட்டுள்ள பிரகடனம்:
''2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே நமது லட்சியம். ராமதாஸ் காட்டும் வழியில் மக்கள் பணியாற்றி, பாமகவை வலுப்படுத்துவோம்!
» பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: பாமக தீர்மானம்
» வீடிழந்தவர்களுக்கு திருவொற்றியூரிலேயே குடியிருப்புகளை வழங்குக: முதல்வருக்கு விஜயகாந்த் கடிதம்
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. மொத்தம் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமகவின் உழைப்பு, மக்களின் நலனுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ஆற்றிய பணிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு.
ஆக்கப்பூர்வ அரசியல் கட்சியாக: சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் கூட, மக்கள் நலனுக்கான அதன் பணிகள் எந்த வகையிலும் குறையவில்லை. ஓர் ஆக்கப்பூர்வ அரசியல் கட்சிக்குரிய இலக்கணத்துடன் பாமக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுதல் (Criticize), மாநில வளர்ச்சிக்காக புதிய யோசனைகளை வழங்குதல் (Creative), ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுதல் (Constructive) ஆகிய மூன்று ‘சி’-க்களைக் கடைப்பிடித்து பாமகவை நிறுவனர் ராமதாஸ் வழிநடத்திச் செல்கிறார். அந்த வகையில் தமிழ்நாட்டின் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பாமக திகழ்கிறது.
முக்கியத்துவம் பெறும் ராமதாஸ் யோசனைகள்: தமிழக மக்களின் நலன்கள், கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது அதற்கான முதல் குரல் மருத்துவர் ராமதாஸிடமிருந்துதான் எழுகிறது. தமிழகத்தின் வளர்ச்சி, தமிழக மக்களின் நலன்கள் ஆகியவை சார்ந்த பிரச்சினைகளில் ராமதாஸ் தெரிவிக்கும் யோசனைகள் தமிழக அரசால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ராமதாஸின் பல யோசனைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் பாமகவின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன.
எதிர்க்கட்சியாக இருப்பதைவிட ஆட்சியை வழங்கும் கட்சியாக: அதே நேரத்தில் ஓர் அரசியல் கட்சியாக, பாமக, அதன் செயல்பாடுகள் குறித்து இத்துடன் மனநிறைவு கொள்ள முடியாது. ஜனநாயகத்திலும், மக்கள் நலனிலும் அக்கறை கொண்ட எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அதன் இலக்கு ஆட்சியைப் பிடிப்பதாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும். மக்களின் நலனுக்கான திட்டங்களை ஆட்சியாளர்களுக்கு யோசனையாக முன்வைத்துச் செயல்படுத்துவதை விட, அவற்றை நேரடியாகவே செயல்படுத்தும் இடத்தில் இருப்பதும், ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியாக இருப்பதை விட, தவறுகளே செய்யாத சிறந்த ஆட்சியை வழங்கும் இடத்தில் இருப்பதும்தான் ஓர் அரசியல் கட்சியின் உன்னத நோக்கமாக இருக்கும். பாமகவின் நோக்கமும் அதுதான்; அதைத் தவிர வேறொன்றுமில்லை.
சமூக நீதிக்காக கூட்டணி வைத்தது தவறில்லை: அந்த இலக்கை அடையும் எண்ணத்துடன்தான் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தலைமையில் தனி அணி அமைத்துப் போட்டியிடும் முடிவை பாமக எடுத்தது. அத்துடன் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறுவதற்கான வலுவான அடித்தளத்தையும் பாமக அமைத்தது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதே நிலைப்பாட்டை பாமக தொடர்ந்திருந்தால் அதன் வெற்றி வாய்ப்பு விகிதம் அதிகரித்து இருக்கலாம். ஆனால், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கான சமூக நீதியை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். அப்படி ஒரு முடிவை எடுத்ததில் எந்தத் தவறும் இருப்பதாக பாமக கருதவில்லை.
2026-ஐ வென்றெடுப்போம்: 2021 தேர்தல் நிறைவடைந்துவிட்ட சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் நமது நோக்கத்தை வென்றெடுப்பதற்கான அரசியல் பயணத்தை நாம் தொடங்கியாக வேண்டும். அதைத்தான் ராமதாஸ் அடுத்தடுத்து தெரிவித்து வருகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது சற்று கடினமான இலக்குதான்; ஆனால் சாத்தியமாகாத இலக்கு அல்ல. அனைத்துப் பாட்டாளிகளும் கடுமையாக உழைத்தால் அந்த இலக்கை நம்மால் நிச்சயமாக எட்ட முடியும்.
பாமக தலைமையில் தனி அணி: தமிழக அரசியலின் பிதாமகர் ராமதாஸ்தான். அவரது சொல்தான் பாட்டாளிகளுக்கு வேதம். தமிழ்நாட்டின் நலனையும், தமிழ்நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டுதான் அவர் எந்த முடிவையும் எடுப்பார். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் முன்னேற்றம் என்பதுதான் ராமதாஸ் லட்சியம். அந்த லட்சியங்களை வென்றெடுத்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். அதற்காக பாமக தலைமையில் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்க வேண்டுமென ராமதாஸ் விரும்புகிறார்.
தமிழகத்தை பாட்டாளி ஆள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை எட்டுவதற்காக ராமதாஸ் காட்டும் வழியில் பயணிக்க வேண்டும்; மக்களை மீண்டும், மீண்டும் சந்தித்து அவர்களின் ஆதரவை வென்றெடுப்பது; பாமகவை அனைத்து கிராமங்களிலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பாமக பொதுக்குழு உறுதியேற்றுக் கொள்கிறது''.
இவ்வாறு பாமக தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago