அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனைத்துவித பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

கால்நடை பராமரிப்புத் துறைசார்பில் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள இயக்குநரக வளாகத்தில் நேற்றுநடைபெற்றது. இதில் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், செயலர் சு.ஜவகர், இயக்குநர் அ.ஞானசேகரன் மற்றும்மண்டல இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அதிகாரிகளிடையே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

கால்நடை பராமரிப்புத் துறையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தடையின்றி செயல்படுத்த அனைத்து காலி பணியிடங்களையும் துரிதமாக நிரப்ப வேண்டும்.

ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட 38,800 பெண்களுக்கு தலா 5 ஆடு வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். கால்நடைகளுக்கு இனப்பெருக்க சேவை மற்றும் முதலுதவி அளிக்க 50 கால்நடை கிளை நிலையங்கள் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்பட உள்ளன.

அதேபோல, 25 கால்நடை கிளைநிலையங்கள் ரூ.3.5 கோடியில் மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும். மேலும், துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.57.56 கோடி மதிப்பில் 85 கால்நடை நிலையங்கள், 3 கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள் அமைக்கப்படும்.

முதல்கட்டமாக 1,000 ஏக்கர்மேய்க்கால் நிலங்களை மேம்படுத்த ரூ.1.67 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க திருநெல்வேலி அபிஷேகப்பட்டி கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் குஞ்சு பொறிப்பகம் ரூ.9.42 மதிப்பீட்டில் நிறுவப்படும். அதன்மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் கோழிக்குஞ்சுகள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று துறைசார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன், கால்நடை வளர்ப்பு மூலம் பெறும் வருமானத்தை அதிகரிக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE