சென்னை திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்த சம்பவத்தையடுத்து, மாநிலம் முழுவதும் பழுதடைந்த வீடுகள் குறித்த ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60 இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்கும் பணி நடந்து வருவதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஈரோட்டில் தெரிவித்தார்.
சென்னை திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளில், பழுதடைந்த நிலையில் இருந்த 28 வீடுகள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தையடுத்து குடிசைமாற்று வாரியம், வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் உறுதித் தன்மை குறித்த ஆய்வினை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டு, வாடகை அடிப்படையில் அரசு ஊழியர்கள் உள்ளிட்டேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை 20 வருடங்களுக்கு மேற்பட்டவை என்பதால், இவற்றின் உறுதித்தன்மை குறித்த அச்சம் குடியிருப்பாளர்களிடையே எழுந்துள்ளது.
இதனிடையே, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் பிறந்த தின விழாவில் பங்கேற்ற வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் ஆகியவை தனித்தனியாக இயங்குகின்றன. இவற்றின் மூலம் கட்டப்பட்ட கட்டிடங்களில் எந்தெந்த கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன என்பது குறித்த புகார்களின் அடிப்படையில், ஆய்வு நடத்திஉள்ளோம். அந்த ஆய்வில் கோவை, சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் பழுதடைந்த கட்டிடங்கள் உள்ளன.
கடந்த 15 ஆண்டு காலமாக இவை மேம்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அதற்காக, ஆண்டுக்கு இவ்வளவுதான் நிதிஒதுக்கமுடியும் எனக்கூறி சீரமைப்புப் பணிகளைத் தள்ளிப்போட அரசு தயாராக இல்லை. குறிப்பிட்ட காலகட்டத்துக்குள், ஏதோ ஒரு திட்டத்தின்கீழ் இவற்றை சீரமைக்க விரும்புகிறோம்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 193 இடங்களில் அரசு குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 20 சதவீதம் தனியாரும் வசிக்கின்றனர். அதில் 60 இடங்களில் உள்ள கட்டிடங்கள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. அவற்றை எல்லாம் இடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளோம். பல இடங்களில் இடிக்கும் பணி நடந்துள்ளது. அனைத்து பழுதடைந்த கட்டிடங்களையும் இடித்து விட்டு அங்கு புதிதாக குடியிருப்புகளைக் கட்டுவதற்கான ஏற்பாடு செய்யவுள்ளோம்.
பழைய கட்டிடங்களின் தரம் குறித்து சொன்னால் வேறு விவாதங்கள் வரும். எவ்வளவு சிறப்பான கட்டிடங்களைக் கட்டித் தந்தாலும், அதில் குடியிருப்போர் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 1961-ல் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 4.35 லட்சம் மனை மற்றும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரசு குடியிருப்புகள் மட்டுமே வீட்டுவசதி வாரியத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான காலி இடங்களில், புதிய குடியிருப்புகளைக் கட்டுவதில் அரசு கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில், தற்போது சென்னை திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பழுதடைந்த வீடுகளின் மீது வீட்டுவசதி வாரியத்தின் கவனம் திரும்பியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago