அஞ்சல்துறையின் ‘கோர் பேங்கிங்’ வசதியில் மென்பொருள், இணையத் தொடர்பு ஆகியவற்றில் தொடர்ந்து பிரச்சினை நிலவுவதால் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அனைத்து அஞ்சலகங்களையும் கணினி மயமாக்கும் வகையில் ஒருங்கிணைந்த வங்கிச்சேவை எனப்படும் ‘கோர் பேங்கிங்’ வசதியை ஏற்படுத்துவதற்கான பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
ரூ.800 கோடி ஒதுக்கீட்டில் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற பெயரில் மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 2013-ம் ஆண்டு முதல் முறையாக சென்னையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2014-ல் வெறும் 230 அஞ்சலகங்களில் மட்டுமே இருந்த இவ்வசதி, தற்போது 25,406 அஞ்சலகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள சுமார் 96 சதவீத அஞ்சலகங்கள் ‘கோர் பேங்கிங்’ வசதியைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ‘கோர் பேங்கிங்’ வசதியின் மென்பொருள், இணைய தொடர்பு ஆகியவற்றில் பரவலாக பிரச்சினை நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. வங்கிகளைப் போன்ற, எளிதான பணப் பரிவர்த்தனை சேவையை வழங்கும் எனக் கூறப்பட்ட ‘கோர் பேங்கிங்’ திட்டம், தற்போது முடக்கத்தைச் சந்தித்து வருவதாகவும், இணைய தொடர்பு, மென்பொருள் பிரச்சினைகளை சரிசெய்தால் மட்டுமே இத்திட்டம் பயனளிக்கும் என அஞ்சல்துறை ஊழியர்கள் கூறுகின்றனர்.
கோவையைச் சேர்ந்த அஞ்சல் துறை ஊழியர்கள் கூறியதாவது: அஞ்சல்துறை வளர்ச்சிக்காக ‘கோர் பேங்கிங்’, ஏடிஎம் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட்டன. அதில் ‘கோர் பேங்கிங்’ திட்டம் மூலம், வங்கிகளுக்கு நிகரான எளிமையான பணப் பரிவர்த்தனை வசதி வழங்கப்பட்டது.
இதனால் மக்களுக்கு நம்பிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் சமீப காலமாக ‘கோர் பேங்கிங்’ திட்டத்தில் அடிக்கடி இணையத் தொடர்பு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
முன்பு ஒவ்வொரு அஞ்சலகமும் தனித்தனியான இணைய தொடர்பில் சஞ்சய்போஸ்ட் என்ற மென்பொருள் உதவியுடன் இயங்கி வந்தது. அதன் பிறகு ‘கோர் பேங்கிங்’ திட்டத்தில் சிஃபி, பிஎஸ்என்எல் ஆகிய நெட்வொர்க்களில் அனைத்து அஞ்சலகங்களும் இணைக்கப்பட்டு பினாக்கில் இயங்குதளத்தில் (மென்பொருள்) அவை இயங்குகின்றன. பிரபலமான தனியார் மென்பொருள் நிறுவனம் இதை வடிவமைத்து வழங்கி இருக்கிறது.
கடந்த சில நாட்களாக இந்த மென்பொருளின் இயக்கமும், இணையத் தொடர்பும் படுமோச மாக இயங்கி வருகின்றன. மணிக்கணக்கில் வாடிக்கையாளர் கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சில தினங்கள் முன்பு மும்பையில் மாதுங்கா என்ற இடத்தில் ‘கோர் பேங்கிங்’ பிரச்சினையால், ஆத்திரமடைந்த மக்கள் அஞ்சலகத்தையே அடித்து நொறுக்கி விட்டனர்.
அதேபோன்ற நிலைதான் அனைத்து அஞ்சலகங்களிலும் இருக்கிறது. பணப் பரிவர்த்தனை, புதிய கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தாமதமாகி வருகின்றன. 5 நிமிடங்களில் முடியக்கூடிய பணிகள் கூட மணிக்கணக்கில் முடியாமல் போவதால் வாடிக்கையாளர்கள் சிரமத்தைச் சந்திக்கின்றனர். ஊழியர்களும் இரவு வரை பணியாற்ற வேண்டியுள்ளது. மாநில அளவில் உள்ள அஞ்சலக அதிகாரிகளும் தீர்வுக்கான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்பார்ப்பு
அஞ்சல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இப்பிரச்சினை குறித்து அனைத்து தரப்பிலிருந்தும் மத்திய அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்குமான திட்டம் என்பதால், மாநில அளவிலும், கோட்ட அளவிலும் எந்த முடிவும் எடுக்க முடியாது.
இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.
நாடு முழுவதுமுள்ள சுமார் 96 சதவீத அஞ்சலகங்கள் ‘கோர் பேங்கிங்’ வசதியைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago