விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் விவகாரம்: திமுகவுக்கு ஓபிஎஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை : விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படும் விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "ஒரு திட்டத்தை அதிமுக செயல்படுத்தினால் அது ரத்தம், அதே திட்டத்தை திமுக செயல்படுத்தினால் அது தக்காளி சட்னியா" என வினவியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழ்நாட்டில் முதன் முதலாக சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அந்தத் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. அண்மைக் காலமாக விவசாயத்திற்கான மின்சார இணைப்புகளில் மின் மீட்டர் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

2002-2003ம் ஆண்டு நடைபெற்ற வரவு, செலவுத் திட்டத்தின் மீதான பொது விவாதம் 02-04-2002 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்றபோது பேசிய திமுக உறுப்பினர் எ.வ. வேலு, நிதிநிலை அறிக்கை பக்கம் 13-ல் தமிழ்நாடு மின்சார வாரியம் மாநிலத்தில் வழங்கியுள்ள மின் இணைப்புகள் அனைத்திற்கும் மின்னளவைக் கருவிகளைப் பொருத்தும் முழுத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டு, விவசாயிகள் எல்லாம் இலவச மின்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்திலே ஒரு மீட்டர் வைக்க வேண்டும் என்று சொன்னால் அது என்ன பொருள் என்று புரியவில்லை என்று கூறினார்.

அதாவது, மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கருத்து கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்துப் பேசிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா "விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என்பதை தெளிவாக அறிவித்து விட்டோம். இப்போது மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. அது எதற்காக என்று உறுப்பினர் கேட்கிறார். விவசாயிகளுக்காக எவ்வவவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அரசிற்கு, விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு எத்தனை யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை அளவிடத்தான், கணக்கிடத்தான் மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன" என்று விளக்கமாக பதில் அளித்தார்.

இருப்பினும், அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதனை எதிர்த்து போராட்டம் நடத்தின. 2020ம் ஆண்டு மின்சாரச் சட்டமுன்வடிவு மத்திய அரசால் வெளியிடப்பட்டபோது, இந்தச் சட்டமுன்வடிவு விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும், வீட்டுப் பயனீட்டாளர்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் நிறுத்தும் ஒரு முயற்சி என்று கூறி, அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தவர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கின்ற நிலையில், திமுக எதை எதிர்த்ததோ அது செயல்பாட்டிற்கு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டு, ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கியதை ஒரு மிகப் பெரிய சாதனை போல சித்தரித்து, இதுபோன்ற அரசு இந்தியாவிலேயே இல்லை என்று பேசினார். ஆனால், இந்த புதிய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படுவதைப் பற்றி வாய் திறக்கவில்லை.

இன்றைக்கு அந்த இணைப்புகளில் எல்லாம் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், இது மட்டுமல்லாமல், இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இது குறித்து மின்சார வாரிய அதிகாரி தெரிவிக்கையில், விவசாயத்திற்கு இலவசமாக தொடர்ந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றும், கட்டணம் வசூலிக்க மீட்டர் பொருத்தப்படவில்லை என்றும், எவ்வளவு மின் பயன்பாடு உள்ளது என்பதை அறியத்தான் என்றும் கூறியுள்ளார்.

இதைத்தானே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சொன்னார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சொன்னது. அப்போது அதை விமர்சித்தவர், இப்போது அதை செய்து கொண்டிருக்கிறார்கள். ' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செய்தால் அது ரத்தம்', தி.மு.க. மேற்கொண்டால் அது 'தக்காளி சட்னி' என்ற நகைச்சுவை தான் நினைவிற்கு வருகிறது.

மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பும் வழங்கக்கூடாது, இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளிலும் மீட்டர் பொருத்த வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவிற்கு இணங்க எல்லா மின் இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், எதிர்காலத்தில் கட்டணம் வசூலிப்பதற்காகத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு என்றில்லாமல், விவசாயிகளின் அச்சத்தை நீக்கும் வகையில், மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்