பறவைக்காய்ச்சல் | மக்கள் பீதியடைய தேவையில்லை: கோவை கால்நடை பராமரிப்புத் துறை

By க.சக்திவேல்

கோவை: 'முட்டை, கோழிக் கறியை சமைத்து உண்பதினால் H5N1 பறவைக்காய்ச்சல் பரவும் தன்மை மிக மிக குறைவு. எனவே, முட்டை, கோழி இறைச்சியை பயமின்றி உண்ணலாம். தற்சமயம் கோவை மாவட்டத்தில் இந்நோயின் தாக்கமோ, வீரியமோ இல்லாததால் மக்கள் பீதியடைய தேவையில்லை' என்று கோவை கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தில், வாத்து இனங்களில் அதிகப்படியாக இறப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போபாலிலுள்ள தேசிய கால்நடை நோய் கண்டறியும் ஆய்வகத்தில் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், H5N1 பறவைக்காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கோவை மாவட்டத்தில் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து கோழி, முட்டை, குஞ்சுகள், கோழிக் கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள் கோவை மாவட்டத்திற்குள் நுழைவதை தடைசெய்து திரும்ப அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

'தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கோழிகள், முட்டை, குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அங்கிருந்து திரும்ப தமிழகம் வரும் வாகனங்கள், கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. கோவையில் உள்ள 1,252 கோழிப் பண்ணைகள், வலசை வரும் பறவைகள், நீர்நிலைகள் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நோயின் வீரியம் அறியப்படவில்லை.

பறவைகளில் நோயின் அறிகுறிகள், தலை வீக்கம், தொண்டை மற்றும் தாடி பகுதிகளில் வெளுத்தும், மூக்கில் சளியுடனும், தொடை பகுதியில் உள்ள தசைகளில் இரத்தக்கசிவோடு அதிக இறப்பு ஏற்படின் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க பண்ணையாளர்கள், விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பறவைக் காய்ச்சல் டாக்சிக் 60 டிகிரி செல்சியஸுக்கு மேலான வெப்பநிலையில் 3 நிமிடங்களில் அழியக்கூடியது. எனவே, முட்டை, கோழிக் கறியை சமைத்து உண்பதினால் இந்நோய் பரவும் தன்மை மிக மிக குறைவு. எனவே, முட்டை, கோழி இறைச்சியை பயமின்றி உண்ணலாம். தற்சமயம் கோவை மாவட்டத்தில் இந்நோயின் தாக்கமோ, வீரியமோ இல்லாததால் மக்கள் பீதியடைய தேவையில்லை' என்று கோவை கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE