கோவை நிகழ்ச்சிக்காக திமுகவினருக்கு காவல்துறை முறைப்படி அனுமதி வழங்கியதா? - தினகரன் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: கோவை தி.மு.க நிகழ்ச்சியில் நடந்த கரோனா விதிமீறல் குறித்த அமைச்சரின் விளக்கக்கத்தை சாடிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கரோனா விதிமுறைகள் மீறப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். கொடிசியா உள்ளரங்கில் திமுக நிகழ்ச்சி நடத்தியதாக அவர் கூறுவது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் உள்ளது. 25,000 பேர் கலந்துகொண்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையோ காணொலிகளையோ பார்க்கும் பச்சைக் குழந்தைக்குக் கூட இந்த நிகழ்ச்சி உள்ளரங்கில் நடந்ததா? அல்லது மைதானத்தில் நடந்ததா? என்பது புரியும்.

அதில் குறைந்தபட்சம் எத்தனை பேர் முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள்? சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கிறார்கள்? ஒமைக்ரான் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் மத்திய அரசின் குழுவும் தமிழகத்திற்கு வந்துள்ள இந்த வேளையில் திமுக பாக முகவர்களை ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் ஒன்று திரட்ட வேண்டிய அவசியம் என்ன? தங்களது சொந்தக் கட்சியினருக்கும் அவர்கள் வழியாக பொதுமக்களுக்கும் நோய்ப் பரவலை ஏற்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கும் இவர்களே காரணமாக இருக்கலாமா? ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பதைக் காட்டி எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் அஞ்சலி செலுத்த காவல்துறை தடைவிதித்த போது, சமூக பொறுப்புமிக்க ஓர் அரசியல் இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதனையேற்று செயல்பட்டது.

ஆனால், கோவை நிகழ்ச்சிக்கு திமுகவினருக்கு காவல்துறை முறைப்படி அனுமதி வழங்கினார்களா? அப்படி காவல்துறை பாரபட்சத்துடன் அனுமதி கொடுத்திருந்தால், இனி வரும் காலங்களில் மக்கள் நலப் பிரச்னைகளுக்காக உரிய கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளோடு நாங்கள் போராட்டம் நடத்தும்போது காவல்துறையினர் அனுமதி தர மறுத்தால் கோவை நிகழ்ச்சியை ஆதாரமாக காட்டி நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE