தஞ்சாவூர்: தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த ஆங்கிலேய ஆட்சியாளர் ஒயிட் எல்லீஸுக்கு தமிழக அரசு விழா எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன் வலியுறுத்தியுள்ளார்.
சோழர் வரலாற்று ஆய்வுச் சங்கம் சார்பில் தஞ்சாவூர் அருகே உள்ள மானாங்கோரையில் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அருமொழி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், சங்கத் தலைவர் என்.செல்வராஜ் வரவேற்றார். உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன், மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, இந்திய தொல்லியல் துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் டி.அருண்ராஜ், தஞ்சாவூர் துணை வட்ட பராமரிப்பு உதவியாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில், உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியை எஸ்.சாந்தினிபீ உட்பட கல்வெட்டு, வரலாறு தொடர்பாக சிறந்து விளங்கிய 36 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கி, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது: தமிழகத்தில் தொன்மையான இடங்களை எல்லாம் வெளிக்கொணர்வதற்கும், தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிப்பதற்கும் இதுபோன்ற அமைப்புகளின் பாராட்டும், பங்களிப்பும் போற்றப்படக்கூடியது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்து, பின்னர் சென்னையில் ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஒயிட் எல்லீஸ் என்பவருக்கு தமிழ் மொழியில் ஈடுபாடு ஏற்பட்டது.
“தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ். தமிழ் மொழியில் இருந்துதான் பிற தென்னிந்திய மொழிகள் வந்தன” என தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர் ஒயிட் எல்லீஸ். பின்னர், தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடி தென்னகப் பகுதிகளுக்கு வந்தபோது, ராமநாதபுரத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது சமாதி அப்பகுதியில் உள்ள ராமலிங்கவிலாஸ் என்ற இடத்தில் உள்ளது.
தமிழுக்கு பெருமைச் சேர்த்த ஒயிட் எல்லீஸை கவுரவிக்கும் வகையில், அவரது சமாதியை அரசு புதுப்பித்து, அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து, அவருக்கு விழா எடுக்க வேண்டும். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த அவர், தமிழ் மொழிக்கு உயிர்கொடுத்தவர் என்பதை உலகுக்கு அறிவிக்க வேண்டும்.
தமிழில் உள்ள கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்று முன்பிருந்த விதியை நீதிமன்றத்தின் மூலம் நான் நீக்கினேன். சமஸ்கிருதமும் பழமையான மொழிதான். ஆனால், சமஸ்கிருதத்தைவிட தொன்மையான மொழி தமிழ்.
தமிழுக்கு முக்கியத்துவம்
மத்திய அரசு பிறமொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழுக்கும் கொடுக்க வேண்டும். பிறமொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டு, தமிழின் பெருமைகள் ஒவ்வொன்றாக அறியப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க பல தடைகள் வந்தபோதும், நீதிமன்றம் மூலம் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழின் பெருமைகளை அறிவதற்கு மத்திய அரசு தடைக்கல்லாக இருக்கிறது என தெரிவித்தார். விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்வெட்டு, வரலாற்று ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago