''மீண்டும் கோபம் கொண்டு எங்களை அழித்துவிடாதே'': சுனாமி நினைவு தினத்தில் ராமேஸ்வரம், பாம்பனில் மீனவர்கள் மலர் அஞ்சலி

By கி.தனபாலன்

சுனாமி பேரலையின் 17-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பனில் மீனவர்கள் கடலில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 26.12.2004-ல் இந்தோனேஷியா நாட்டில் சுனாமி பேரலை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தமிழகத்திலும் சுனாமி பேரலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் கடலோர பகுதிகளில் மீனவ மக்களால் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு சுனாமி பேரலை ஏற்பட்டு நேற்று 17-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகம் பகுதியில் மீனவர் சங்க தலைவர்கள் ஜேசுராஜ், எமரிட், சகாயம் உள்ளிட்ட மீனவ சங்க நிர்வாகிகள், மீனவர்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு பாம்பன் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்.

பாம்பன் வடக்கு கடற்கரையில் மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் ஒன்றுகூடி கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது ''மீண்டும் கோபம் கொண்டு எங்களை அழித்துவிடாதே'' என்று கடல் தாயிடம் அவர்கள் வேண்டிக் கொண்டனர். மேலும் கடல் வளம் காப்போம் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, மதிமுக மாவட்டச் செயலாளர் பேட்ரிக், ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன், மீனவர் சங்க நிர்வாகி ரூஸ்வெல்ட் உள்ளிட்ட மீனவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE