சென்னை - சேலம் எட்டுவழி சாலை திட்டத்தை அனுமதிக்கக்கூடாது : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2018ல் மத்திய அரசு சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை அறிவித்தபோதே விளைநிலங்களும் கிராமங்களும் பாதிக்கப்படுமென விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது மீண்டும் 8 வழிச்சாலைக்கான பணிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து பாமக நிறுவனர் ச.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. பெருநிறுவன முதலாளிகளின் நலனுக்காக தமிழ்நாட்டு உழவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கத் துடிக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டுவது உழவர்களின் நலனுக்கு எதிரானதாகும்.

சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையில் இருந்து சேலத்திற்கு 276.5 கி.மீ நீளத்திற்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு, அத்திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டியது. அதற்காக சுமார் 7 ஆயிரம் உழவர்களிடமிருந்து சுமார் 6978 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியது.

உழவர்களை பாதிக்கும் 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி, இந்தத் திட்டத்தை ரத்து செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த தடை விதித்து கடந்த 2019-இல் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், 8 வழிச் சாலை திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் கூட அத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட விதம் தவறானது என்பதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உழவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ஓராண்டு காலம் பொறுமையாக இருந்த மத்திய அரசு, இப்போது சென்னை & சேலம் இடையே எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக பிகார் மாநிலம் தன்பாத் ஐ.ஐடி வல்லுனர் குழுவைக் கொண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயாரித்துள்ளது.

அடுத்தக்கட்டமாக சமூக, பொருளாதார தாக்கம் குறித்து அறிக்கை தயாரித்து அளிக்க கேரள அரசின் கிட்கோ நிறுவனத்தை மத்திய அரசு அமர்த்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அனுமதி தரும்படி தமிழக அரசிடம் அந்நிறுவனம் கோரியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச் சாலை தமிழ்நாட்டுக்கு தேவையில்லை; அது விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். சென்னையில் இருந்து சேலம் செல்ல ஏற்கனவே 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. நான்காவதாக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாக சேலத்திற்கு செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 179- ஏ பணிகளும் நிறைவடைந்துள்ளன. இத்தகைய சூழலில் ஐந்தாவதாக இந்த சாலை தேவையில்லை என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது.

சென்னை & சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். யாரோ சிலர் பயனடைவதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. சென்னை & சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட, அதற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தமிழக அரசு தான் செய்து கொடுத்தாக வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு எடுத்தால், சென்னை & சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை தமிழகத்தில் மத்திய அரசால் செயல்படுத்த முடியாது.

அதிமுக ஆட்சியில் சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, தொடக்கத்தில் தடுமாற்றமான நிலைப்பாடுகளை எடுத்தாலும் கூட, பின்னாளில் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதாக திமுக அறிவித்தது. எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு இப்போது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது?.... மக்களின் பக்கம் நிற்கப் போகிறதா.... மத்திய அரசின் பக்க நிற்கப் போகிறதா? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும். இது குறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டு உழவர்களின் நலன்களுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது திணிக்கக் கூடாது. ஒருவேளை மத்திய அரசு அத்திட்டத்தை செயல்படுத்த முனைந்தாலும் அதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்