சென்னை: தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருட்கள் மீது கலால் வரியை உயர்த்தி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மாநில உரிமைகளைப் பறித்து, நிதி ஆதாரங்களை மத்தியில் குவித்துக் கொள்ளும் மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் தமிழ்நாடு பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், நுகர்வோர்களின் கருத்துகளைக் கேட்டறியாமல், நடப்பு மாத மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி விதித்து கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவச மின்சாரம் வழங்கி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து வந்த ஆட்சியும் மின் நுகர்வோர் நலன் கருதி மானியங்கள் வழங்கி, கட்டணச் சலுகை அளித்து உதவி வருகின்றன.
தற்போதுள்ள நடைமுறையில் வீடுகளின் மின்நுகர்வில் முதல் 100 யூனிட் மின்சாரம் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. இதுபோல் கைத்தறி மற்றும் விசைத்தறிக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மின் நுகர்வில் 100 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்திய வீடுகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது அநியாயமாகும். சான்றாக திருச்சி மின் திட்டத்தில் மின் இணைப்பு எண் 464-ன் மின் கட்டணம் ரூ.95. இதற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி ரூ.90 என்பதைத் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
பெட்ரோலியப் பொருட்களும், அத்தியாவசிய காய்கறி உள்ளிட்ட உணவு தானியங்களின் விலையும் வானத்தை நோக்கி உயர்ந்து வரும்போது, வருமான வாய்ப்புகள் அடைபட்டுக் கிடக்கும் மக்களிடம் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டிய மாநில அரசு அதனை ஏற்றுக் கொள்ளக்கூடாது என வலியுறுத்துகிறோம். எதிர்ப்பு தெரிவிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வசூலிக்கப்பட்ட வரித் தொகையைக் கட்டணத்தில் வரவு வைத்து ஈடு செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago