நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கொலைவெறித் தாக்குதல்: நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் கொலை வெறித்தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழகத்தில் தற்போது ஒரு நூதனமான ஆட்சி தீய சக்திகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதற்கு பல்வேறு சம்பவங்களை எனது அறிக்கைகளின் வாயிலாக அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு (21.12.2021), தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், பேச்சாளரை மேடையிலேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

ஜனநாயக முறையில் நடைபெற்ற அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில், இவ்வாறு திமுக-வினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கை பார்த்தது ஜனநாயகப் படுகொலையாகும்.

அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நாராச நடையில் அதிமுக அரசையும், எங்களையும் விமர்சித்தவர்கள் திமுக-வினர்.

எப்போதும் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் ஆகிய வற்றின் குத்தகைதாரர்கள் தாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்த ஸ்டாலின் இன்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன், அவரது கட்சியினர் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி , எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் குரல் வளையை நெறிக்கிறார்கள்.

தனக்குக் கீழுள்ள காவல் துறையை, திமுக-வினரின் ஏவல் துறையாக மாற்றி, எதிர்க்கட்சியினர் மீது, ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலையும், ஜனநாயகப் படுகொலையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தற்போதுள்ள அரசில், தமிழகத்தில் உள்ள உண்மையான எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். தருமபுரி சம்பவத்தில் ஈடுபட்ட திமுக-வினர் மீதும், இந்த அராஜகத்தைத் தடுக்கத் தவறிய அங்கிருந்த காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல் துறை தலைவரை வற்புறுத்துகிறேன்.

டிசம்பர் 21தேதி அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோதவாடி குளம் நிரம்பி வழிந்ததை அடுத்து, அக்கிராம மகளிர் மற்றும் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனை கலந்துகொள்ள அழைத்துள்ளனர். அவர்களுடைய அழைப்பினை ஏற்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பல அரசு மற்றும் கட்சிப் பதவிகளை வகித்த, அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மீதும், வழிபட்ட மகளிர் மீதும் திமுக-வினர் தாக்குதல் நடத்தினர். இதை அன்றே நான் கண்டித்தேன்.

இருப்பினும், தாக்குதலுக்குள்ளான சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் மீதே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது விந்தையாக உள்ளது. பாதுகாப்பிற்கு வந்த காவல் துறையினர் முன்னிலையிலேயே, கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினரை விட்டுவிட்டு, தாக்குதலுக்குள்ளானவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, அதிமுக ஆட்சியில், இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதலிடம் வகித்த தமிழக காவல்துறை, தற்போதுள்ள திமுக அரசில் ஆளும் கட்சியினரின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

இனியாவது முதல்வர் ஸ்டாலின், சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்றில்லாமல், தமிழ் நாட்டில் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் ஆகியவை ஜனநாயக முறையில் பொதுக்கூட்டம் நடத்துவதையும், கருத்துக்கள் வெளிப்படுத்துவதையும் காவல் துறையினரை வைத்தும், தனது கட்சியினரை வைத்தும் தடுக்க நினைக்கும் போக்கை கைவிட வேண்டும். இல்லையெனில் இந்த அராஜகப் போக்கை எதிர்த்து பொதுமக்களே வீதியில் இறங்கி போராடும் நிலை உருவாகும்."

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்