சென்னை: விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், சட்டமன்றத்திற்கு வெளியேயும் அதிமுக நிச்சயம் குரல் கொடுக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளாக விளங்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவற்றில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு. உணவு இல்லையெனில் மனிதனில்லை எனும் நிலையில் அவ்வுணவை மனிதர்களுக்கு அள்ளித் தருவதில் முதன்மையான இடத்தை வகிப்பது விவசாயம்.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளைப் போற்றும் வகையில் விவசாயத்தை நேசிக்கக்கூடிய இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த தினமான டிசம்பர் மாதம் 23-ம் தேதியான இன்று தேசிய விவசாயிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விவசாயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
உணவுக்காக உழவரிடமே செல்ல வேண்டியிருப்பதால் எவ்வளவு கஷ்டமானாலும் உழவுத் தொழிலே உலகில் தலையானது என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட தலையாய தொழிலை மேற்கொள்ளும் விவசாயிகளிடம் மிகுந்த அன்பையும், பாசத்தையும் மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வைத்திருந்தனர்.
» ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் இன்று ஆலோசனை
» தட்டாமலேயே, கேட்காமலேயே உதவிகளை செய்யும் திமுக அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
நாடோடி மன்னன் திரைப்படத்தில், "நானே போடப்போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம், நாடு நலம் பெறும் திட்டம்" என்று தமிழ்நாட்டின் முதல்வராக வருவதற்கு முன்பே விவசாயிகளுக்காகப் பாடி, தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தான் சொன்னதை செய்து காட்டும் வகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தவர் 'தீர்க்கதரிசி' எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். வழியில் வந்த ஜெயலலிதாவும் நிலத்திலே முத்தெடுத்து ஊருக்கு உணவூட்டும் உன்னதத் தொழிலாளியான விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெற ஏதுவாக கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கும் 'முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவி, முதியோர் ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரணம் எனப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இது மட்டுமல்லாமல், விவசாயிகள் நலன் கருதி, சட்டப் போராட்டத்தின் மூலமாக காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததோடு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தையும் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் காட்டியவர் ஜெயலலிதா.
வயிற்றுக்குச் சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற மகாகவி பாரதியின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், வேளாண் இயந்திரங்களைக் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு அளித்தது, நுண்ணீர்ப் பாசனம் அமைத்துப் பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் அளித்தது, விலை வீழ்ச்சி அடையும் காலங்களில் விவசாயிகள் உணவுப் பொருட்களைச் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் - காலங்களில் விற்பனை செய்ய உணவுக் கிடங்குகளைக் கட்டித் தந்தது, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயப் பெருமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் உழவர் பெருவிழா எனும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தியது, பாரம்பரிய வேளாண் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது என எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.
இன்று அதிமுக ஆட்சியில் இல்லையென்றாலும், அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்குதல், உயிரிழந்த கால்நடைகளுக்கான இழப்பீட்டினை உயர்த்தி வழங்குதல், விளைபொருள்களுக்கான நியாயமான தொகை உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், சட்டமன்றத்திற்கு வெளியேயும் நிச்சயம் குரல் கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் வென்றெடுக்கப்பட எனது வாழ்த்துகள்.
இந்த நன்னாளில் வேளாண் உற்பத்தி அதிகரித்து, வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து, உழவர் பெருமக்களின் வாழ்வில் வளம் பெருகட்டும் என நாம் அனைவரும் உறுதி ஏற்போம். வாழ்க வேளாண் தொழில்! வளர்க வேளாண் பெருமக்கள்!" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago