புத்துயிர் பெறும் தனுஷ்கோடி: டிசம்பர் 22 புயலால் அழிந்த 57-வது நினைவு தினம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ரயில் நிலையம், அதனருகே துறைமுகம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இரு புறமும் நீலவர்ணத்தில் கடலும், இதமான காற்றும், தேனீக்களைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள்... இவையெல்லாம் தனுஷ்கோடியின் முந்தைய அடையாளங்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்திற்காக மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்ரவரி 24-ம் தேதி போர்ட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. தொடர்ந்து தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரே டிக்கெட்டில் வியாபாரிகள் பல்வேறு வகையான பண்டங்களையும், சரக்குகளையும் தனுஷ்கோடி ரயில் நிலையத்திற்கு கொண்டுசென்று பிறகு அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் சென்று தலைமன்னாரில் இருந்து மீண்டும் ரயிலில் கொழும்பு வரையிலும் கொண்டு சென்றனர்.

சென்னை எழும்பூலிருந்து கொழும்பு வரையிலுமான டிக்கெட்

கொழும்பிலிருந்து எலட்ரிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தமிழகத்திற்கு வாங்கி வந்தனர். இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வியாபார வளர்ச்சி வளர்ந்தது.

இந்த ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964 டிசம்பர் 17-ல் காற்றழுத்தத் தாழ்வுநிலை அந்தமான் கடல் பகுதியில் உருவானது. அது புயலாக உருவெடுத்து டிசம்பர் 22-ல் தனுஷ்கோடிக்குள் புகுந்தது. தனுஷ்கோடியைப் புயல் தாக்கியதில் ரயில்வே நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

புயல் தாக்கி 54 ஆண்டுகள் கழிந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை 17.20 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.208 கோடியில் புதிய ரயில் பாதை அமைக்க முடிவு சர்வே பணிகளை மேற்கொண்டது. கன்னியாகுமரியில் 1.3.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி புதிய தனுஷ்கோடி ரயில் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த வழித்தடத்தில் ஜடாயு தீர்த்தம், கோதாண்ட ராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய புதிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து சென்னை ஐஐடியைச் சார்ந்த பொறியாளர்கள் தனுஷ்கோடிக்கான ரயில் பாதையை ஆய்வு செய்து ரயில் பாதையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க சாலை மட்டத்திலிருந்து ஆறிலிருந்து ஏழு மீட்டர் உயரத்திற்குப் பரிந்துரைத்தனர். 1964இல் புயல் தாக்கியபோது அப்போதைய ரயில் தண்டவாளங்கள் சாலை மட்டத்திலிருந்து ஒரு மீட்டருக்கும் குறைவான அளவையே கொண்டிருந்தன. இதனால் தற்போது தனுஷ்கோடிக்கான புதிய ரயில்வே பாதைக்கான நிதி மேலும் ரூ.500 கோடி தேவை என்பதால் ரூ.208 கோடியிலிருந்து சுமார் ரூ.700 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளாக தனுஷ்கோடி ரயில் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைய உள்ள இடங்களான கோதண்டராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம், கம்பிபாடு ஆகிய இடங்களில் வளர்ந்து நிற்கும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

தனுஷ்கோடியிலிருந்து ரயில் நிலையத்தின் தற்போதைய தோற்றம்

மேலும் சமீபத்தில் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இந்திய-இலங்கை இரு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்