தமிழக மீனவர்கள் மீது  கிருமிநாசினி தெளிப்பு: வெளியுறவு அமைச்சரிடம் அன்புமணி சுட்டிக்காட்டியதாக பாமக தகவல்

சென்னை: இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாக பாமக தெரிவித்துள்ளது. மேலும், தமிழக மீனவர்கள் கரோனா மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவர்கள் அனைவர் மீதும் கிருமிநாசினியை இலங்கை சுகாதாரத்துறைப் பணியாளர்கள் எந்திரம் மூலம் தெளித்திருப்பதையும், அது மனிதத் தன்மையற்ற செயல் என்பதையும் வெளியுறவு அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார் என்றும் பாமக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபாட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 69 பேர், அவர்கள் பயணித்த 11 படகுகளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் விளக்கிக் கூறினார்.

தமிழக மீனவர்கள் கரோனா மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பாக, அவர்கள் அனைவர் மீதும் கிருமிநாசினியை இலங்கை சுகாதாரத்துறைப் பணியாளர்கள் எந்திரம் மூலம் தெளித்திருப்பதையும், அது மனிதத் தன்மையற்ற செயல் என்பதையும் வெளியுறவு அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார். மனிதர்கள் மீது கிருமிநாசினியை பீய்ச்சி அடிப்பது உலக சுகாதார நிறுவனத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் விளக்கிக் கூறிய அன்புமணி ராமதாஸ், இத்தகைய அவலமான சூழலில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 69 பேரையும், அவர்களிடம் படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து கவலை தெரிவித்தார். தமிழக மீனவர்கள் 69 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றும், வெகு விரைவில் 69 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார். இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார்’ என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE