புதுவை சட்டப்பேரவைக்கு வர கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: சட்டப்பேரவைக்குள் வர கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் தேவை என்ற உத்தரவு அமலாகியுள்ளது. தடுப்பூசி போடவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுவையை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இதற்காக வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு முகாம்கள் நடந்து வருகிறது. வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சட்டப்பேரவை வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அரசின் சுகாதாரத்துறை சார்பில் சட்டப்பேரவை நுழைவு வாயிலில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவைக்கு வரும் ஊழியர்கள், அமைச்சர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களிடம் கரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கேட்டனர். சான்றிதழ் இல்லாதவர்களின் மொபைல் எண் மூலம் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், விபரங்கள் சரிபார்க்கப்பட்டது. ஆதார் எண் மூலமும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்த தயங்கியவர்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கமாட்டோம் எனக்கூறி திருப்பி அனுப்பினர். பேரவைக்கு வந்த பேரவைத்தலைவர் செல்வம் இப்பணிகளின் செயல்பாடுகளை கேட்டறிந்து, தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்கவும், தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே இனி பேரவைக்குள் அனுமதிக்கவேண்டும் என்று சபை காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE