மீனவர்கள் கைது: இலங்கை அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை: மீனவர்கள் 13 பேரைக் கைது செய்துள்ள இலங்கை அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 2 தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் 2 படகுகளில் மீன்பிடித்த 13 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. இதைக் கண்டித்து இன்று (டிச.22) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனைத்துப் படகுகளும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இங்கிருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள், ராமேசுவரத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்கள் தொடர் வேட்டையாடுவதைத் தடுப்பதற்காக கடந்த 3 நாட்களாக இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் 68 இந்திய மீனவர்கள் (அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். 10 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டு மீனவர்களின் வேட்டையாடும் செயலை முறியடிக்கும் விதமாக 24 மணி நேரமும் இலங்கை கடற்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கூறுகையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகை மூழ்கடித்து, அதில் இருந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். இதேபோன்று, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு மீனவர் கொல்லப்பட்டார்.

இலங்கை கடற்படையினரால் மீனவர்களைக் கொலை செய்வது, சிறைப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இதுகுறித்து மத்திய அரசிடம் பல முறை வலியுறுத்தியும் எவ்விதத் தீர்வும் ஏற்படவில்லை. எனவே, இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதில், இரு நாட்டு மீனவர்களும் இணக்கமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். எவ்வித நிபந்தனையுமின்றி பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

தவிர, இங்கிருந்து சுமார் 30 மீனவர்கள், ராமேசுவரத்தில் இலங்கை அரசைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்'' என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE