சென்னை: எண்ணூரில் மக்கள் ஏற்கெனவே அவதியுற்றுவரும் நிலையில் அங்கு புதியதாக அனல்மின் நிலையம் அமைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என பண்ருட்டி வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பருவநிலை மாற்றம் குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், புதியதாக அனல்மின் நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
''பருவநிலை மாற்றம் குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், எண்ணூரில் மேலும் புதியதாக அனல்மின் நிலையம் அமைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
2016ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின் படி, 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கடந்துவிட்டால், பருவநிலைப் பேரழிவு எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் சுற்றுச்சூழல் நிபுணர்கள், அறிவியலாளர்களின் ஒருமித்த கருத்து.
இதனை, உலக நாடுகளின் அரசுகளும், லாபம் கொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் காது கொடுத்துக் கேட்காமல் இருந்தாலும் கூட, பருவநிலை குறித்தும், அடுத்த தலைமுறை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கட்டாயம் என்று கூறுவதை விட, அடுத்த தலைமுறை குறித்து சிந்திக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை நமக்கு உள்ளது.
இந்தப் பருவநிலை மாற்றம் குறித்து சிந்தித்துதான், எதிர் வரும் காலங்களில் அணுமின் நிலையங்களையும், அனல்மின் நிலையங்களையும் இழுத்து மூட வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறோம். அதற்கு மாற்றாக, சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மின் உற்பத்தி நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இச்சூழலில், எண்ணூர் பகுதியில் மேலும் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 2009-ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், புதிய சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, இரு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், பாலிமர் மற்றும் ரசாயன ஆலைகள், வாகனத் தொழிற்சாலைகள், மிகப்பெரிய குப்பைக் கிடங்கு, நிலக்கரி சேமிப்பிடங்கள் என சூழலைப் பாதிக்கும் 38 தொழிற்சாலைகள் எண்ணூர் மணலி பகுதியில் அமைந்துள்ளன.
இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பல்வேறு உடல் உபாதைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வாழத் தகுதியற்ற இடமாக வடசென்னை மாறிவருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அப்பகுதியில் மீண்டும் புதிதாக அனல் மின் நிலையம் கட்டுவது, சுற்றுச்சூழலுக்கும், வடசென்னை மக்களுக்கும் செய்யும் மாபெரும் அநீதியாகும்.
மும்பை, டெல்லி, பெங்களூருவை விட சென்னையில்தான் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் காற்று மாசினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன என சமீபத்தில் வெளியான C40 ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டி பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு, திருவொற்றியூர், காசிமேடு, குருவிமேடு, மீஞ்சூர், ஊரணம்மேடு, செப்பாக்கம், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம் ஆகிய அனல் மின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் PM 2.5 நுண் துகளின் அளவுகள் உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவுகளாக நிர்ணயித்துள்ள அளவுகளை விட, நான்கு முதல் எட்டு மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளதாக ஹெல்த் எனர்ஜி இனிசியேட்டிவ் ஆய்வறிக்கையின் வாயிலாகத் தெரியவருகிறது.
எனவே, எண்ணூர் பகுதியில் ஏற்கெனவே அனல் மின் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், அப்பகுதியில் மேலும் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது''.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago