தமிழக மீனவர்களை பாதுகாக்காத மத்திய அரசு: வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழ்நாட்டு மீனவர்கள் 55 பேரை, நேற்று இலங்கைக் கடற்படை கைது செய்து இருக்கின்றது; அவர்களுடைய 6 மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்து கொண்டு போயிருக்கின்றனர். 1980 களில் தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில், 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று விட்டது.

அன்று முதல் இன்று வரையிலும், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், இதுகுறித்து நான் பேசி வருகின்றேன்; கேள்விகள் கேட்டு வருகின்றேன். இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில்கூட, நான் கேட்டு இருந்த கேள்விக்கு, அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார். (கேள்வி எண் 1350; நாள் 9.12.2021).

இலங்கைப் பிரதமருடன் இந்தியத் தலைமை அமைச்சர் பேசினார்; அயல் உறவுத்துறை அமைச்சர், இலங்கைக்குச் சென்று பேசினார்; அயல் உறவுத்துறைச் செயலர் இலங்கைக்குச் சென்று பேசினார்; கூட்டுப் பணிக்குழு அமைத்து, நான்கு சுற்றுகள் பேசி இருக்கின்றோம்; ஐந்தாவது சுற்று பேசப்போகின்றோம் என, அயல் உறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

இதுவரை நடந்த பேச்சுகளில் என்ன தீர்வு கண்டீர்கள்? இனி எதற்காகப் பேச வேண்டும்? குஜராத் மீனவர் ஒருவரை, பாகிஸ்தான் கடற்படை தாக்கியது என்றவுடன், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, அயல் உறவுத்துறை அமைச்சகத்துக்கு வரவழைத்து, கண்டனத்தைப் பதிவு செய்கின்ற பாரதிய ஜனதா அரசு, தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்கை செய்யாதது ஏன்?

கேரளத்தில் இரண்டு மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இத்தாலியர்களைச் சிறைப்பிடித்து, அந்த நாட்டிடம் இருந்து கோடிக்கணக்கில் இழப்பு ஈட்டுத் தொகை பெற்றுக் கொடுத்து இருக்கின்றார்கள். அதுபோல, இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஈடு எதுவும் பெற்றுத் தந்தது இல்லை. அந்தக் கோரிக்கையைப் பலமுறை வலியுறுத்தியும் பயன் இல்லை.

கேளாக் காதினராக ஒன்றிய அரசு இருக்கின்றது; ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கைத்தான் அரசு கடைப்பிடித்து வருகின்றது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை; தீர்வு எதுவும் இல்லை; இந்தியக் கடற்படை தன் கடமையைச் செய்யவில்லை.

லண்டனில் உள்ள லிபிய நாட்டுத் தூதரகக் காவலர்கள், தவறுதலாக இங்கிலாந்து காவலர் ஒருவரைச் சுட்டுக்கொன்றதற்காக, அந்த நாட்டுடன் தூதரக உறவுகளை உடனே முறித்துக் கொள்வதாக இங்கிலாந்து நாடு உடனே அறிவித்தது.

நேற்று இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்த 55 மீனவர்களை இன்றைக்கே விடுதலை செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், இலங்கை அரசுடன் தூதரக உறவுகளை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்; தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருவதற்கு, பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்."

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்