நீட் விலக்கு சட்டத்தின் நிலை குறித்து மக்களுக்கு தமிழக அரசு விளக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

நீட் விலக்கு சட்டத்தின் நிலை குறித்து மக்களுக்கு தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நாளை 21 ஆம் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. ஆனால், நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் கிடைப்பதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. இத்தகைய நிச்சயமற்ற நிலை நிலவுவது மாணவர்களுக்கு நன்மை பயக்காது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த சட்ட முன்வரைவை ஆதரித்து வாக்களித்தன. சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டதைத் தவிர்த்து, இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு 100 நாட்கள் நிறைவடையவுள்ளன. ஒரு சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கான கால அவகாசத்தை விட இது பல மடங்கு அதிகம் ஆகும். நுழைவுத் தேர்வுகளில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத்தை இயற்றிய அனுபவம் தமிழகத்திற்கு ஏற்கனவே உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு முதன்முதலில் 1984-ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. அதை ரத்து செய்வதற்கான சட்டம் கடந்த 2006-ஆண்டு திசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த சட்டத்திற்கு ஆளுனர், மத்திய அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, 2007 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் நாள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நடைமுறைகள் அனைத்தும் மொத்தமாக 86 நாட்களில் நிறைவடைந்து விட்டன. இது தான் சரியான கால அவகாசமாகும்.

ஆனால், இப்போது நீட் விலக்கு சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டு நாளையுடன் 100 நாட்களாகும் நிலையில், அதற்கு ஆளுனரின் ஒப்புதல் கூட கிடைக்கவில்லை. இத்தாமதம் எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல. ஒரு சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளை பின்பற்றி நிறைவேற்றப்பட்டு இருந்தால் அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதை உறுதி செய்ய ஓரிரு நாட்கள் போதுமானது. ஒரு வேளை பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து ஆளுனருக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் அது குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை பெறலாம்.

இந்த நடைமுறைகளை பின்பற்றினால் கூட ஓரிரு வாரங்களில் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட முடியும். ஆனால், 100 நாட்களாகியும் நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததற்கு அரசியலைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு எந்தப் பயனும் இல்லை. அதன்பின் நவம்பர் 27-ஆம் தேதி முதலமைச்சர் மீண்டும் ஆளுநரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார். சட்டப்பேரவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனும் கடந்த 17-ஆம் தேதி இது தொடர்பாக ஆளுனரை சந்தித்தார். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக ஆளுநர் இனியும் தாமதம் செய்யாமல் நீட் விலக்கு சட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

அதே நேரத்தில் ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை மட்டுமே காரணம் காட்டி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறும் கடமையிலிருந்து தமிழக அரசு விலகி விடக் கூடாது. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது எளிதானது அல்ல என்பது அனைவரும் அறிந்தது தான். முந்தைய அதிமுக ஆட்சியில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களை மத்திய அரசு ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியது. அதை நன்றாக அறிந்து தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வு அட்டவணை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படக்கூடும்.

அதற்கு முன்பாக அடுத்த ஆண்டில் தமிழகத்தில் நீட் உண்டா... இல்லையா? என்பதை தமிழக அரசு உறுதிப்பட தெரிவிக்க வேண்டும். ஆளுனரைக் காரணம் காட்டி, நீட் விலக்கை தமிழக அரசும் காலவரையரையின்றி தாமதப்படுத்திக் கொண்டே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நீட் விலக்கு சட்டத்தின் இப்போதைய நிலை என்ன? அதற்கு ஆளுனரில் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை அனைத்து நிலைகளிலும் ஒப்புதல் பெற தமிழக அரசு என்ன செயல்திட்டம் வைத்துள்ளது? எவ்வளவு காலத்திற்குள் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படும்? வரும் ஆண்டில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் உண்டா... இல்லையா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

நீட்டுக்கு விலக்கு பெறும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அனைத்து வழிகளிலும் ஒப்புதல் அளிக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறவும், தமிழ்நாட்டு மாணவர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்