இலங்கைத் தமிழரை வளைக்கும் சீனா; இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து: ராமதாஸ் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய சீனா, ஈழத்தமிழர்களுக்கு உதவுவது இயல்பானது அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹாங் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு வாழும் ஈழத் தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் அவர் ஏராளமான உதவிகளை வாரி வழங்கியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ய உதவிய சீனா, ஈழத்தமிழர்களுக்கு உதவுவது இயல்பானது அல்ல.

இலங்கைக்கான சீனத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள கி சென்ஹாங், கடந்த புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்களும் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேட்டி அணிந்து சென்ற சீனத் தூதர், அங்கு இந்து சமய முறைப்படி வழிபாடு நடத்தியதுடன், கோயிலுக்கு நன்கொடைகளையும் வழங்கியுள்ளார்.

கோயிலுக்கு வெளியில் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் தீயால் அழிந்து சீரமைக்கப் பட்ட நூலகத்திற்கு சென்ற சீனத் தூதர், நூலகப் பயன்பாட்டுக்கு மடிகணினி உள்ளிட்ட உதவிகளை வழங்கியதுடன், நூலகத்தை டிஜிட்டல்மயமாக்கவும் சீனா உதவும் என்று அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், உணவு தானியங்கள் என ரூ.75 லட்சத்திற்கும் கூடுதலான உதவிகளை சீனத் தூதர் சென்ஹாங் வழங்கியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போருக்கு அனைத்து வகைகளிலும் உதவியது சீன அரசு தான். அப்படிப்பட்ட சீன அரசு இப்போது திடீரென ஈழத்தமிழர்கள் மீது பாசம் காட்டுவதன் பின்னணியில் திட்டமிடப்பட்ட கணக்குகள் உள்ளன. சீனாவையும், சிங்களத்தையும் எதிரியாகப் பார்க்கும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தனக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொண்டு, இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கால் பதிக்க வேண்டும்; அதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பது தான் சீனாவின் நோக்கமாகும். அதன் ஒரு கட்டமாகத் தான் சீனத் தூதர் தமிழராகவே மாறி ஆலய வழிபாடு, மீனவர்களுக்கு உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கி, நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கான நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

சீனாவின் இந்த திடீர் கரிசனத்திற்கு, இந்திய மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கையால் சீனாவுக்கு ஏற்பட்ட பின்னடைவும் ஒரு காரணமாகும். தமிழகத்திற்கு அருகில் உள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய 3 தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் சினோசர் &- இடெக்வின் நிறுவனத்திற்கு கடந்த ஜனவரியில் இலங்கை வழங்கியது.

இத்திட்டங்களை செயல்படுத்தும் போர்வையில் தமிழ்நாட்டை சீனா கண்காணிக்கும் ஆபத்து உள்ளதாகவும் இந்தியா இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின்னர் அத்தீவுகளில் மின்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ரூ.87 கோடியை இந்தியா இலங்கைக்கு இலவசமாகவே கொடுத்ததால், அத்திட்டத்திலிருந்து சீனாவை இலங்கை வெளியேற்றி விட்டது. இந்தியாவின் அழுத்தம் தான் அதற்கான காரணம் என்று மறைமுகமாக குற்றம்சாட்டிய சீனா, இப்போது மாலத்தீவுகளில் கலப்பு மின்திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை கண்காணிப்பதற்கான முதல் முயற்சி தோல்வியடைந்து விட்ட நிலையில், ஈழத்தமிழர்களின் ஆதரவு இல்லாமல் வடக்கு இலங்கையில் கால்பதிக்க முடியாது என்பதால் தான், இலங்கைத் தமிழர்களை வளைக்கும் முயற்சியை சீனா மேற்கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொண்ட சீனத் தூதர் சென்ஹாங், பருத்தித்துறைக்கு சென்று அங்குள்ள சிங்கள கடற்படையினரிடம் ‘‘இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம்?’’ என்று கேட்டறிந்ததும், அங்கிருந்து டிரோன்கள் மூலம் இந்திய எல்லையை கண்காணித்ததும், கடைசியாக தமிழக எல்லைக்கு அருகில் இராமர் பாலத்தின் மூன்றாவது மணற்திட்டு வரை படகில் பயணித்து பார்வையிட்டுச் சென்றுள்ளதும் பொழுதுபோக்குவதற்காக அல்ல; இந்தியாவை கண்காணிப்பதற்கான உத்திகளை வகுப்பதற்காகத் தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

இலங்கைத் தமிழர்களை வளைத்து, வடக்கு இலங்கையில் கால் பதித்து விடலாம்; அதன்பின் இந்தியாவுக்கு தொல்லை தரலாம் என்று சீனா நினைத்தால், அந்த முயற்சிக்கு இலங்கைத் தமிழர்கள் துணை போக மாட்டார்கள். இலங்கைக்கு ஆதரவாக ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களை இந்தியா கடந்த காலங்களில் செய்துள்ளது என்றாலும் கூட, இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எத்தகைய சதித்திட்டத்திற்கும் இலங்கைத் தமிழர்கள் துணை போக மாட்டார்கள். அதேநேரத்தில் சீனாவுக்கு வழங்கியிருந்த மின் திட்ட ஒப்பந்தத்தை இலங்கை திரும்பப் பெற்று விட்டது என்பதாலேயே இலங்கையை நம்ப முடியாது. நாளையே சீனா இன்னும் பல மடங்கு நிதி அளித்தால் இந்தியாவுக்கு துரோகம் செய்ய இலங்கை தயங்காது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகள் எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இதைக் கருத்தில் கொண்டு இந்தியா பாதுகாப்பு உத்திகளிலும், வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்டு இந்தியாவுக்கான கண்காணிப்பு மையமாக மாற்றிக் கொள்வதுடன், இலங்கைத் தமிழர்களை ஆதரித்து அவர்களை வடக்கு இலங்கையில் அதிகாரம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்