மதுரை அரசு மருத்துவமனையில் ஒரே நபர் 60 முறை பாம்பே ப்ளட் குரூப் ரத்த தானம்

By செய்திப்பிரிவு

மதுரை அரசு மருத்துவமனையில் ஒரே நபர் பாம்பே குரூப் ரத்தத்தை 60 முறை தானமாக அளித்துள்ளார்.

பொதுவாக 'ஓ' பிரிவு ரத்தத்தை `யுனிவர்சல் டோனர்’ என்பார்கள்.

அதாவது, `ஏ’, `பி’, `ஏபி’ ஆகிய அனைத்து ரத்த பிரிவினருக்கும் `ஓ' ரத்தத்தை ஏற்ற முடியும். ஆனால் பாம்பே குரூப் ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு இதைக்கூட ஏற்ற முடியாது.

பாம்பே குரூப் ரத்த வகை நோயா ளிகள் வந்தால் அவர்களுக்கு ரத்தம் வழங்குவதற்கு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கியினர் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதனால், பாம்பே குரூப் ரத்தக் கொடையாளர்களை சில ஆண்டாக ஊக்குவித்து வருகிறது அரசு மருத்துவமனை.

மதுரை மாவட்டம் அழகர் கோவில் மாத்தூரைச் சேர்ந்தவர் எம்.தினேஷ்(43). பாம்பே பாசிட்டிவ் குரூப் ரத்தம் கொண்ட இவர் 60 முறை ரத்த தானம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு ஆட்சியர் விருது வழங்கி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

என் ரத்தம் அபூர்வ வகை என்பதால் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே சென்று ரத்த தானம் செய்துள்ளேன். ஐதராபாத் சென்றும் ரத்த தானம் செய்துள்ளேன். ஒரு முறை மலேசியாவில் ரத்த தானம் செய்திருக்கிறேன். அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது என்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தது முதல் ரத்த தானம் செய்து வருகிறேன்.

இந்த வகை ரத்தத்தைக் கொண்டு ஏராளமான நோயாளிகளை காப்பாற்ற முடிவதால் அதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ஒரு முறை இரவு 1 மணிக்கு என் வீட்டுக்கு ஆம்புலன்ஸில் வந்து ரத்த தானம் பெற்றனர். அப்போது ஒரு தாயையும், குழந்தையும் காப்பாற்ற முடிந்தது என்றார்.

ரத்த வங்கி துறைத் தலைவர் டாக்டர் சிந்தா கூறுகையில், ‘பாம்பே குரூப்’ ரத்த வகையைச் சேர்ந்த யாராவது வந்து அட்மிட் ஆனால், அதே குரூப் ரத்தம் உள்ளவருக்கு போன் செய்வோம். அவர்களில், யாராவது ஒருவர் வந்து ரத்த தானம் செய்வார்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE