தரமின்றி கட்டப்பட்டதாக புகார்; மானாமதுரை ரயில்வே மேம்பாலம் சேதம்: அசம்பாவிதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா?

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை - பரமக்குடி நான்கு வழிச் சாலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ரயில்வே மேம்பாலம் சேதமடைந்துள்ளது.

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. இதற்காக மானாமதுரையில் ரயில்வே மேம்பாலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த பாலம் தல்லாகுளம் முனியாண்டி கோயிலில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை ஒரு கி.மீ. தூரத்துக்கு அமைக்கப் பட்டது.

இப்பாலம் கட்டப்பட்ட பின்பு சில மாதங்களிலேயே ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதை சரிசெய்தனர். அப்போதே பாலம் தரமின்றி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இந்நிலையில், தற்போது பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த பாலம் சேதமடைந்து வருவதால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து சீரமைக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ஆண்டி கூறியதாவது: பாலம் கட்டும்போதே தரமில்லை எனக் கூறினோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஏற்கெனவே ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தற்போது வேறொரு பகுதியும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது மையப் பகுதியில் இருப்பதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE