இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (18.12.2021) செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், ஈரோடு, IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி, காவேரி மெடிக்கல் சென்டர், கரூர், அமராவதி மருத்துவமனை, நெல்லை கேலக்ஸி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் காணொலிக் காட்சி வாயிலாக "இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48" திட்டத்தில் இணைக்கப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை 609 மருத்துவமனைகளில் தொடங்குவதன் அடையாளமாக, 18 மருத்துவமனைகளின் பிரதிநிதிகளிடம் அதற்கான கடவுச் சொற்களை வழங்கி, இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காணொலி குறுந்தகட்டினையும் வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைக் குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திடும் நோக்கில் தமிழக அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம்.

இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48" திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் (ceiling limit) சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் (81 treatment Packages) சிகிச்சை அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக (Unstable) இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், பின்வரும் மூன்று வழிகாட்டுதல்களின்படி சிகிச்சைகள் வழங்கப்படும்

1. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம்.

2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையைக் கட்டணமில்லாமல் தொடரலாம்.

3. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்குச் செல்லத் தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார் காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சையைப் பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையைத் தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம்.

இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாகப் பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைதளங்களில் (https://cmchistn.com) வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இதுகுறித்த விவரங்களை மருத்துவமனை, அவசரகால ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்