அரசு அதிகாரிகளை மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

கோவை: அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினால் அதிமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் உக்கடம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் ஸ்ட்ரீட் ஆர்ட் (street art ) வரையும் நிகழ்வினை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:

"கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் 289 சாலைப் பணிகளுக்கு டெண்டர் விடப்படும். கோவை மாநகராட்சி பகுதியில் மேம்பாலங்கள், அரசுக் கட்டிடங்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்படும். பண்பாடு, கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ளும் வகையில் ஓவியங்கள் வரையப்படும். அரசுக் கட்டிடச் சுவர்களில் சுவரொட்டி இல்லாத வகையில் ஒவியங்கள் வரைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திமுக அரசு பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஒரு சாதனை. கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாத அளவுக்கு இருந்தது. இதை மறைத்துவிட்டு நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் பேசி இருக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் உச்சபட்சக் கருத்துகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதிமுகவினர் விரக்தியின் அடிப்படையில் இப்படி பேசி இருக்கின்றனர். அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசுவது சரியல்ல, வார்த்தைகளைக் கவனித்துப் பேச வேண்டும், முகம் சுளிக்காத அளவுக்குப் பேச வேண்டும்.

கடந்த கால நிகழ்வுகளை மறைத்து அதிமுகவினர் நேற்றைய கூட்டத்தில் பேசி இருக்கின்றனர். இதற்காக அதிமுகவினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். 2013-ல் ஒப்புதல் பெற்ற சாலைப் பணிகளைக்கூட அதிமுக ஆட்சியில் செய்யவில்லை. மாநகராட்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சம்பளம் உட்பட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி இருக்கின்றனர். மாநகராட்சி ஒப்புதல் இல்லாமல், ஒப்பந்தம் விடாமல் ஒதுக்கிய பணிகளை ரத்து செய்யாமல் என்ன செய்ய முடியும்?.

கோவையில் அரசு அதிகாரிகளை வார்த்தைகளில் மிரட்டும் வகையில் பேசுவதை அதிமுகவினர் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த சோதனைக்கு அதிமுகவினர் மூன்று விதமான முரண்பட்ட கருத்துகளைச் சொல்கின்றனர். இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிதான்.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான புகார் உள்ளது. 2006, 2012, 2016, 2021-ம் ஆண்டு தேர்தல்களில் தாக்கல் செய்த சொத்து மதிப்புப் பட்டியலை தங்கமணி வெளியிட வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி யாரெல்லாம் ஊழல் செய்து இருக்கின்றனரோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது."

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE