சென்னை: பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்பழகனின் சிலையை முதல்வர் ஸ்டாலின் நாளை திறக்கவுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' ‘இனமான பேராசிரியர்’ என்று கருணாநிதியால் பெருமிதத்தோடும், பேரறிஞப் பெருந்தகை அண்ணாவால் ‘பேராசிரியர் தம்பி’ என்று அன்போடும் அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன்.
படிக்கின்ற காலகட்டத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும், பேரறிஞப் பெருந்தகை அண்ணாவின் தமிழ் உணர்வுமிக்க பேச்சாற்றாலின்பாலும் ஈர்க்கப்பட்டு, பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் 1922-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19-ம் நாள் கல்யாண சுந்தரனார் – சொர்ணாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தணியாத தாகம் கொண்டிருந்த காரணத்தினால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் படிப்பை முடித்தார். பேரறிஞர் அண்ணாவின் அன்பு வேண்டுகோளை ஏற்று 1944 முதல் 1957-ம் ஆண்டு வரையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
» முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு
» பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவீர்களா?- வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மாணவர்களின் பங்கு மகத்தானது என்பதை நன்குணர்ந்து, அரசியல், மொழிப் பற்று மற்றும் இனப் பற்றில் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்ததில், பேராசிரியப் பெருமகனாரின் பங்கு மகத்தானது என்றால், அது மிகையாகாது.
பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற நாட்களிலும், துணைப் பேராசிரியாக பணியாற்றிய காலங்களிலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பேரறிஞப் பெருந்தகை அண்ணா பங்கேற்ற விழாவில், பேராசிரியப் பெருமகனார் ஆற்றிய உரையே, அவர் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. 1962-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967-ம் ஆண்டு தொடங்கி 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொடர்ந்த 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.
கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித்துறை அமைச்சராக, தான் அமைச்சராகப் பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், பரந்த தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தியுள்ளார்.
1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில்தான் பேராசிரியர் அன்பழகனாருக்கு கருணாநிதியுடனான முதல் அறிமுகம் ஏற்பட்டது. அன்று தொடங்கிய அந்த நட்பு 75 ஆண்டு காலம் இணை பிரியாத உயரிய நட்புக்கு இலக்கணமாகும். ‘நாங்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்’ என்று மகிழ்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டு மகிழ்ந்தவர் கருணாநிதி.
தமிழ் மொழியின் மீது பேராசிரியர் கொண்டிருந்த அளவற்ற பற்றின் காரணமாக, இராமையா என்கின்ற தனது பெயரை க.அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார். ‘முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் பேரறிஞர் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கருணாநிதியின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும்’ எனப் பேராசிரியர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து, பேராசிரியப் பெருந்தகை “என் அன்புக்குரிய தம்பி ஸ்டாலின் அவரது தந்தையைப் போலவே உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டவர். மக்கள் பணியில் சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராகப் பணியாற்றிப் படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காலமும் கடமையும் என்றும் தவறாதவர். சட்டமன்றத்தில் புள்ளிவிவரத்துடன் திறம்பட பதில் அளிப்பதில் என்றுமே சளைக்காதவர்” என்று பாராட்டி மகிழ்ந்தவர் அன்பழகன்.
அரசியலில், ஆட்சிப் பணியில், அளப்பரிய பல சாதனைகளை, சரித்திரங்களை நிகழ்த்தி இருந்தாலும், எழுத்துப் பணிக்கு என்றுமே அன்பழகன் ஓய்வு தந்ததில்லை. 1948-ம் ஆண்டு புதுவாழ்வு என்னும் மாத இதழ் வாயிலாகத் தனது எழுத்துப் பணியைத் தொடங்கி, சமூக சீர்திருத்தம், இனமொழி, வகுப்புரிமை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரைப் பற்றி 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
குறிப்பாக, ‘தமிழர் திருமணமும் இனமானமும்’, ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’, ‘வாழ்க திராவிடம்’, ‘திராவிட இயக்கத்தின் வரலாறு’ ஆகிய நூல்கள் இன்றளவும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகின்ற நூல்களாகும்.
நீதிக்கட்சி தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட வரலாறு கொண்ட திராவிட இயக்கத்தில், பல்வேறு காலகட்டங்களில் பல தலைவர்கள் தங்களின் பங்களிப்பினைத் தமிழ் நாட்டுக்கும், தமிழ் இன மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் தந்திருந்தாலும், பேராசிரியப் பெருமகனார் காலத்தில், மாணவர் சமுதாயத்தினை அரசியலில், அரசியல் மாற்றத்தில், ஆட்சியின்பால் ஈர்த்துள்ளது அளப்பரிய ஒன்றாகும்.
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளின் தொடக்க நாளான நாளை (19.12.2021) அன்னாரின் அருமைப் பெருமைகளைப் போற்றிப் பாராட்டுகின்ற வகையில், முதல்வர் ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்பழகனின் சிலையைத் திறந்து வைத்து, ஏறத்தாழ 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம், மாநில, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தணிக்கை அலுவலகங்கள் மற்றும் அரசு சிறு சேமிப்புத் துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டியும், நாட்டுடமையாக்கப்பட்டுள்ள அவரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையையும் குடும்பத்தாருக்கு வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்."
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago