மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தீர்வு: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்களின் தற்கொலையைத் தடுப்பதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதுதான் ஒரே தீர்வு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையை அடுத்த புழல் காவாங்கரையைச் சேர்ந்த சுஜித் என்ற மாணவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்ற கவலையில் தற்கொலை செய்துகொண்டது வேதனையளிகிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு அச்சம் மற்றும் தோல்வியால் நடப்பாண்டில் தற்கொலை செய்துகொண்ட ஏழாவது மாணவர் சுஜித் ஆவார். மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

மாணவர்களின் தற்கொலையைத் தடுப்பதற்கு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதுதான் ஒரே தீர்வு. ஆனால், அதற்கான தமிழக அரசின் சட்டத்திற்கு இன்னும் ஆளுநரின் ஒப்புதல் கூடப் பெறப்படவில்லை. இந்த நிச்சயமற்ற நிலை நீடிக்கக் கூடாது.

இன்னும் சில மாதங்களில் அடுத்த கல்வியாண்டு தொடங்கப் போகிறது. அதற்குள்ளாக நீட் விலக்கு பெற்றாக வேண்டும். அதற்கான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்!" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE