பள்ளி மைதானத்தில் சிறுமி மர்ம மரணம்; நிர்வாகத் திறமையின்மையே காரணம்: ஓபிஎஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் பள்ளி மைதானத்தில் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் சம்பவத்திற்குப் பள்ளி நிர்வாகத் திறமையின்மையே காரணம் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே ஆங்காங்கே பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் நடப்பது, ஆசிரியர் மாணவரை அடிப்பது, காவல் துறையினர் கல்லூரி மாணவரைத் துன்புறுத்துவது, ரவுடிகள் காவல் துறையினரைத் தாக்குவது எனச் சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தீயில் கருகிய நிலையில் 10 வயதுச் சிறுமி மர்மமான முறையில் இறந்திருப்பதாக வந்துள்ள செய்தி ஆழ்ந்த துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மூன்று குழந்தைகளும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வருவதாகவும், இவர்களில் இரண்டாவது மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருவதாகவும், நேற்று காலை மூன்று பேரும் பள்ளிக்குச் சென்றதாகவும், காலை 11 மணி அளவில் ஐந்தாவது படிக்கும் 10 வயதுச் சிறுமி வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாகவும், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சக மாணவிகள் அவரைத் தேடியதாகவும், அப்போது பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் தீயில் கருகிய நிலையில் ஒரு சிறுமி கிடந்ததாகவும், தீயில் கருகிய நிலையில் அடையாளம் தெரியாததால், 10 வயதுச் சிறுமியின் மூத்த சகோதரியிடம் தகவல் தெரிவித்ததாகவும், இதைக் கேட்டுப் பதறிப்போன அச்சகோதரி அந்த இடத்திற்குச் சென்று பார்த்து, தீயில் கருகிக் கிடப்பது தனது தங்கைதான் என்று உறுதி செய்ததாகவும், இதனையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கும், தனது பெற்றோருக்கும் அவர் தகவல் கொடுத்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட சிறுமியின் தந்தை பள்ளி வளாகத்திற்கு வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன் மகளை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அந்தச் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இயற்கை உபாதைகளுக்காக பள்ளியின் வகுப்பறையிலிருந்து மாணவ, மாணவியர் வெளியே செல்வது வழக்கம். அவ்வாறு வெளியே செல்லும் மாணவ, மாணவியர் உடனே வகுப்பறைக்குத் திரும்புகிறார்களா என்பதைக் கண்காணிப்பதும், அவ்வாறு திரும்புவதில் காலதாமதம் ஏற்பட்டால், அதுகுறித்த தகவலைப் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிவிப்பதும் அந்த வகுப்பு ஆசிரியரின் கடமை. அதேபோல், வகுப்பறைக்கு வெளியே பள்ளி மைதானம் உட்பட இதர இடங்களில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், காவலாளிக்கும் உண்டு.

பத்திரிகையில் வெளிவந்துள்ள மேற்படிச் சம்பவத்தைப் பார்க்கும்போது, அந்தச் சிறுமி வகுப்பறையை விட்டு வெளியில் வந்த பிறகு, அந்தப் பள்ளி மைதானத்தில் கருகிய நிலையில் உயிரிழந்து இருக்கிறாள் என்றால், இது ஒரு சில மணித்துளிகளில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் அல்ல. இதற்கு சில மணி நேரம் ஆகியிருக்கும். அப்படியென்றால், வகுப்பறைக்கு - வெளியே மாணவ, மாணவியர் மீதான கண்காணிப்பு என்பது நீண்ட நேரமாக இல்லை என்பது தெளிவாகிறது.

இதன்மூலம், மாணவ, மாணவியர் மீதான பள்ளி நிர்வாகத்தின் கண்காணிப்பில் அலட்சியப் போக்கு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுகிறது. மேலும், அந்தப் பள்ளிக்கு காவலாளி இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்வியும், இருக்கிறார் என்றால் அவர் எங்கு இருந்தார் என்ற கேள்வியும் எழுகிறது. பட்டப் பகலில், பள்ளி மைதானத்தில் ஒரு சிறுமி மர்மமான முறையில் தீயில் கருகிக் கிடப்பது நிர்வாகத் திறமையின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஓர் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மரணமடைந்த அந்தச் சிறுமிக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலவர் இந்தப் பிரச்சினையில் தனிக் கவனம் செலுத்தி, சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணத்தைத் தீர விசாரிக்கவும், இதன் பின்னணியில் யாரேனும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE