கூடங்குளம், கல்பாக்கத்தில் கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடையும்?- நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணுசக்தி மின் உற்பத்திக்கான கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடையும் என நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் சில அலகுகளிலும், நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் தற்போது பராமரிப்புப் பணிகளுக்காக அணுசக்தி மின் உற்பத்திப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்துகொண்டுள்ள வேலூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், இந்த அணு உலைகளில் மீண்டும் அணுசக்தி மின் உற்பத்திக்கான கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடையும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்விகள்:

''கூடங்குளத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலைம் (KKNP) 3&4 மற்றும் கல்பாக்கத்தில் உள்ள விரைவு உலை எரிபொருள் சுழற்சி வசதித் திட்டம் (FRFCF) ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) விரைந்து செயல்படுத்துகிறதா?

அப்படியானால், தற்போதைய நிலை மற்றும் மேற்கூறிய திட்டங்களை முடிப்பதற்கான தோராயமான நேரம் என்ன?''

இவ்வாறு கதிர் ஆனந்த் எம்.பி. கேள்விகள் எழுப்பியிருந்தார்.

மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்

இதற்கு அணுசக்தி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

ஆம். நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) செயல்படுத்தி வரும் KKNPP 3&4 (2x1000 MW) திட்டப் பணிகள் நவம்பர், 2021 நிலவரப்படி 54.96 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

கூடங்குளம் கேகேஎன்பிபி 3 மற்றும் 4 திட்டத்தின் அலகுகள் முறையே மார்ச், 2023 மற்றும் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்பாக்கத்தில் ஃபாஸ்ட் ரியாக்டர் எரிபொருள் சுழற்சி வசதி (FRFCF) திட்டம் தற்போது அணுசக்தி மறுசுழற்சி வாரியம், பாபா அணு ஆராய்ச்சி மையம், அணுசக்தி துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. நவம்பர் 30, 2021 நிலவரப்படி திட்டத்தின்படி டிசம்பர் 2027-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.''

இவ்வாறு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE