சென்னை: விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களை மீட்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல் - டீசல், மளிகைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தற்போது மீன்களின் விலையும், மீண்டும் கட்டுமானப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், முந்தைய அதிமுக ஆட்சியில் இருந்த விலைவாசியையும், தற்போதுள்ள விலைவாசியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்துப் பொருட்களின் விலையும் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவரும். இதன் மூலம் மக்கள் தாங்க முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்பப் பொருட்களை உற்பத்தி செய்வது, இயற்கைச் சீற்றங்களிலிருந்து இன்றியமையாப் பொருட்களைக் காப்பது, பொருட்களைப் பதுக்கி வைத்துப் பற்றாக்குறை ஏற்படுத்துவோரைக் கண்டுபிடித்து தண்டிப்பது, கடத்தலைக் கட்டுப்படுத்துவது ஆகியவை விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஆகும்.
இதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசிற்கு உண்டு. - விஷம் போல் ஏறிக்கொண்டே செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்தும், அதைத் தடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நான் பல அறிக்கைகளை விடுத்துள்ளேன். இருந்தாலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. அப்படியே நடப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தாலும் அது வெறும் காகித அளவில்தான் இருக்கிறது. உண்மையாகவே ஆக்கபூர்வமான நடவடிக்கையை அரசு எடுத்திருந்தால், விலைவாசி குறைந்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை. மாறாக, ஏறிக்கொண்டே செல்கிறது.
இந்தச் சூழ்நிலையில், மீன்கள் விலை 35 விழுக்காடு உயர்ந்து இருப்பதாகவும், இதற்குக் காரணம், டீசல் விலை உயர்வு மீன்பிடிப்பதற்குத் தேவைப்படும் உபபொருட்களின் மீதான வரி உயர்வு, மீன் வரத்து குறைவு ஆகியவைதான் என்றும், டீசல் மானியத்தை அரசு உயர்த்தித் தர வேண்டும் என்றும் மீனவ சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து இருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம், புதிய வீடுகளுக்கான கட்டுமானச் செலவு ஒரு சதுர அடிக்கு 1,800 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கட்டுமானப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்பு 400 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது 480 ரூபாய்க்கும், 60 ரூபாயாக இருந்த ஒரு கன அடி எம்.சாண்ட் தற்போது 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதேபோன்று கருங்கல் ஜல்லி, கம்பி ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அரசு உரிமம் பெறப்பட்ட குவாரிகள் வாயிலாக கட்டுமானத் திட்டங்களுக்குத் தேவைப்படும் எம்.சாண்ட், கருங்கல் ஜல்லி ஆகியவை போதுமானதாக இல்லாத நிலையில், சிலர் விதிகளை மீறி தமிழ்நாடு முழுவதும் 4,000 குவாரிகள், கிரஷர்களை நடத்துவதாகவும், இதில் இருந்து பெறப்படும் கருங்கல் துகள்கள், எம்.சாண்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழ்நாட்டின் கனிமவளம் கொள்ளையடிக்கப் படுவதாகவும், இந்தக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த மாதம் 27-ம் தேதியன்று கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அடுத்த மாதம் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் அனைத்து எம்.சாண்ட், மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாகப் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
ஆனால், நீர்வளத்துறை அமைச்சரோ கல்குவாரிகளில் குறையொன்றும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். குறை இருப்பதால்தான் மேற்படி கூட்டமைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. எனவே, இதுகுறித்து மேற்படி கூட்டமைப்பை அழைத்துப் பேசி, கல்குவாரிகளில் உள்ள முறைகேடுகளை களையவும், கருங்கல் துகள்கள் எம்.சாண்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அமைச்சருக்கு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஏழு மாத கால திமுக ஆட்சியில், அனைத்துப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலைமை நீடித்தால், மக்களின் வாங்கும் சக்தி குறைவதோடு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதுதான் அனைவரின் ஒட்டுமொத்தக் கருத்தாக இருக்கிறது.
இந்த நிலைமையில், "இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கு வாக்களிக்காத மக்களையும் கவரக்கூடிய வகையில் என்னுடைய பணி இருக்கும்" என்று முதல்வர் அடிக்கடி கூறி வருகிறார். வாக்களித்த மக்களே அதிமுகவுக்கு வாக்களிக்காமல் திமுகவிற்கு வாக்களித்துவிட்டோமே என்று ஏங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், வாக்களிக்காத மக்களைக் கவரப்போவதாக முதல்வர் தெரிவித்து இருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
'விடியலை நோக்கி' என்ற பிரச்சாரத்தின் மூலம் திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கவில்லை. மாறாக, மக்கள் விரக்தியின் விளிம்பிற்குத்தான் சென்றிருக்கிறார்கள். ஒருவேளை 'விடியலை நோக்கி' என்ற பிரச்சாரம் திமுகவிற்கு விடிவு காலம் கிடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தற்போது வலுவாக எழுந்துள்ளது. எது எப்படியோ, 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்' என்பதற்கேற்ப திமுகவின் குட்டு வெளிப்பட்டுவிட்டது.
தாங்க முடியாத விலைவாசி உயர்வைக் கண்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், விரக்தியில் உள்ள மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் முதல்வர் தன்னுடைய கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago