தமிழகம் முழுவதும் 58,463 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,750 கோடி கடன் வழங்கும் நிகழ்வை திருத்தணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, ‘தேர்தல் வாக்குறுதிகள் எதையும் விட்டுவிட மாட்டோம். நிச்சயம் நிறைவேற்றுவோம். பெண்கள் உயர்வதற்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்’ என முதல்வர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும் 58,463 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பேருக்கு ரூ.2,750 கோடி கடனுதவி அளிக்கும் திட்டத்தின் தொடக்க விழா, திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,831 மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த 23,683 உறுப்பினர்களுக்கு ரூ.105 கோடி வங்கிக் கடன் வழங்கி, இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், மகளிருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அவர் முதல்வராக இருந்தபோதுதான் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. முதலில் தருமபுரி மாவட்டத்திலும், தொடர்ந்து சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. அடுத்து வந்த ஆட்சியில் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை.
தொடர்ந்து, 1996-ம் ஆண்டு மீண்டும் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகுதான் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெருகின.
இன்று தமிழகம் முழுவதும் 7.22 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இதில் ஒரு கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பெண்கள் யார் தயவையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், அவரவர் சொந்தக் காலில் நின்று வாழ்க்கையை நடத்துவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடிய திட்டம்தான் இந்த மகளிர் சுயஉதவிக் குழு திட்டம்.
இந்த நிதி ஆண்டில் மட்டும் 17,479 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.87.39 கோடி சமுதாய முதலீட்டு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி, நலிவுற்றோர் கண்டறியப்பட்டு 5,838 சங்கங்கள் மூலம் ரூ.14.59 கோடி இந்த நிதி ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முதலாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யும் முறை, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 36 லட்சத்து 97,059 குழுக்களுக்கு ரூ.1 லட்சத்து 4,013 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் தர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில், இதுவரை ரூ.6,777 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இத்தொகை ரூ.10 ஆயிரம் கோடியாகிவிடும். அடுத்த ஆண்டுக்குள் அடுத்த ரூ.10 ஆயிரம் கோடி இலக்கை எட்ட உத்தரவிட்டுள்ளேன்.
தேர்தலை சந்திப்பதற்கு முன் நாங்கள் சொன்ன உறுதிமொழிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். நிறைவேற்ற முடியாமல் எதையும் விட்டுவிட மாட்டோம். எல்லா வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன். பெண்கள் உயர்வதற்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
பின்னர் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்து வரும் கைவினைப் பொருட்கள் அடங்கிய கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். மேலும் திருநெல்வேலி, நீலகிரி, தருமபுரி, திருவண்ணாமலை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், திருநங்கைகள் அடங்கிய மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தோரிடம் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டா லின் கலந்துரையாடினார்.
இந்த விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் பல்லவி பல்தேவ், மாவட்ட அளவிலான வங்கிகள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குநர் பர்த பிரதிம் சென்குப்தா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago