மணிகண்டன் காவல்துறையினர் தாக்கி உயிரிழக்கவில்லை: விஷம் குடித்து இறந்ததாக தடயவியல்துறை அறிக்கை  

By என். சன்னாசி

மதுரை: காவல்துறையினர் தாக்கியதில் ராமநாதபுரம் கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழக்கவில்லை. விஷம் குடித்து இறந்ததாக தடயவியல் துறை அறிக்கை வழங்கியது எனக் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவலில் சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர் மணிகண்டன் 4ஆம் தேதி உயிரிழந்த விவகாரம் குறித்து மதுரையில் தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;

''கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு டிச.4ஆம் தேதி அழைத்துவரப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவின. இதன் உண்மை நிலை குறித்து ஆராயப்பட்டது. 4-ம் தேதி மாலை கீழத்தூவல் பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டபோது, மணிகண்டனும், அவருடன் மற்றொரு நபரும் பைக்கில் வந்துள்ளனர். அவர்கள் நிறுத்தாமல் சென்றதால் போலீஸார் பின்தொடர்ந்தபோது, மணிகண்டனுடன் வந்த நபர் இறங்கித் தப்பினார்.

மணிகண்டனை போலீஸார் பிடித்துள்ளனர். பின்னர் பைக்குடன் அவரைக் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவரது பைக்கிற்குரிய ஆவணமில்லை எனத் தெரிந்தது. கல்லூரி மாணவர் என்பதால் 7.30 மணிக்கு மொபைல் மூலம் அவரது தாயாரைக் காவல் நிலையத்திற்கு போலீஸார் வரவழைத்துள்ளனர். அங்கு வந்த அவரது தாயார் மற்றும் உறவினருடன் மணிகண்டனை 8.15 மணிக்கு வீட்டுக்கு நல்ல முறையில் அனுப்பி வைத்துள்ளனர்.

இவை அனைத்தும் காவல் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இருப்பினும், அதிகாலை 2 மணிக்கு மணிகண்டன் இறந்தது தெரியவந்தது. அவர் ஆம்புலன்ஸில் வரும்போதே இறந்ததற்கான தகவலும் உள்ளது. ஆனாலும், அவரது தம்பி அலெக்ஸ் பாண்டியன் மறுநாள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், காவல்துறையினர் தாக்கியதில் மணிகண்டன் இறந்ததாகக் கூறியிருந்தார். காவல் துறையினர் மீது புகார் எழுந்ததால் டிஎஸ்பி, பரமக்குடி ஆர்டிஓ அளவில் விசாரிக்கப்பட்டது.

5ஆம் தேதி 2 மருத்துவர்கள் மற்றும் மாணவரின் குடும்பத்தினர் சார்பில், ஒரு மருத்துவர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாணவரின் குடும்பத்தினருக்குத் திருப்தி இல்லாததால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினர். நீதிமன்ற உத்தரவின் பேரில், தடய அறிவியல் நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் 8ஆம் தேதி மறுபிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். இதுவும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிகண்டன் உடலில் சேகரித்த உறுப்புகளைத் தடயவியல் அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து இறுதி அறிக்கை வழங்கினர். இதன் மூலம் மாணவர் மணிகண்டன் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. காவல்துறையினர் தாக்கியோ, அடித்தோ அவர் உயிரிழக்கவில்லை என்பதும் தெரிந்தது. இதுபற்றி மணிகண்டன் குடும்பத்தினருக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். எதற்காக அவர் விஷம் குடித்தார். அவருடன் வந்து தப்பிய நபர் யார் ? விஷம் அருந்த என்ன காரணம் போன்ற பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரிக்கிறோம். மணிகண்டன் பயன்படுத்திய பைக் திருடப்பட்டது என்பதால் அது பற்றியும் விசாரிக்கப்படுகிறது. இதன் பின்னரே ஒரு முடிவுக்கு வரமுடியும்”.

இவ்வாறு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்