போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரபி நர்சிங் கல்லூரித் தாளாளரது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கே.பாலகிருஷ்ணன் இன்று எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் அனுதினமும் தொடர்ந்து கொண்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சமூக அமைப்புகளும், தமிழக அரசும், காவல்துறையும் இவற்றைத் தடுக்கப் பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் இக்கொடுமைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் ஏராளமான மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்கிற செய்தியின் பின்னணியில், 3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. நர்சிங் கல்லூரி மாணவிகள் நடத்திய தொடர் போராட்டத்திற்குப் பின்னரே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியோடு தமிழக முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருக்கு நீதி கிடைக்க அரசு நிச்சயம் தலையிடும் என்று கூறியது அனைவருக்கும் நம்பிக்கையளிப்பதாக அமைந்தது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த சூழலில் காவல்துறை அவரைக் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்கள் போக்சோ பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிணையில் விடுவிப்பது எளிதாக நடந்துவிடக் கூடாது என்கிற அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. மாவட்டக் குழந்தைகள் நலக்குழு மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் ஆகியோருக்குத் தகவல் கொடுத்து அவர்களது கருத்துகளையும் கேட்ட பின்னரே பிணை குறித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதெல்லாம் நீதிமன்ற உத்தரவுகளாக வெளிவந்துள்ளன.
தனது பதவியையும், செல்வாக்கையும் பயன்படுத்தி ஏராளமான மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி இவ்வளவு சுலபமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் கே.பாலபாரதி தலைமையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க (AIDWA) பெண்கள் 06.12.21 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அச்சமயம் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் தெய்வேந்திரன் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து, அதில் பங்கேற்ற பெண்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி, தாக்குதல் நோக்கத்தோடு கொலை மிரட்டல் தொனியில் பேசி இயக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். இது ஏ.எஸ்.பி. முன்னிலையிலேயே நடந்திருக்கிறது. பங்கேற்ற பெண்கள் உடனடியாக அவருடைய நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர்.
பின்னர் அதுகுறித்து ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராணி தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாருக்கு வெறும் ரசீது மட்டுமே (CSR) அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாதர் சங்கப் பெண்கள் குறித்து, நடக்காததை எல்லாம் ஜோடித்து தெய்வேந்திரன் கொடுத்த பொய்யான புகார் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் மாதர் சங்க பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக அக்கறையோடு, பாதிக்கப்பட்ட இளம் மாணவிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்கள் நடத்தி வருவது தாங்கள் அறிந்ததே. அத்தகைய அமைப்பின் மீது, குற்றவாளிக்கு ஆதரவாக ஒரு தனிநபர் கொடுத்த பொய்யான புகார் மீது வழக்குப் பதிவு செய்த தாடிக்கொம்பு காவல்துறை, ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கே வந்து பெண்கள் மீது தாக்குதல் தொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த தெய்வேந்திரன் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் நிராகரித்துள்ளது சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, நியாயமற்றது என்பதைத் தங்களது கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் தங்களது உத்தரவின் பேரில் சென்னை மாநகர காவல் ஆணையம், ஜூடிசியல் அகாடமியுடன் இணைந்து போக்சோ வழக்குகளைக் காவல்துறை முறையாகக் கையாளுவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கியிருப்பது குறித்த பத்திரிகை செய்தி வெளிவந்தது; அதனை வரவேற்கிறோம். அதே கவனத்தோடும், கவலையோடும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
1) ஜோதிமுருகன் சம்பந்தப்பட்ட போக்சோ வழக்கை சிபிசிஐடி பிரிவிற்கு மாற்றிட வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாதிக்கப்படுகிற பாலியல் வழக்குகளை உள்ளூர் காவல்துறை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது.
2) திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தின் பிணை உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்ய வேண்டும். எந்த செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றவாளி பாலியல் துன்புறுத்தல் செய்தாரோ, அதே பொறுப்பில், பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பது மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற உணர்வையும், மிகப்பெரிய அச்சத்தையும் ஏற்படுத்தும்.
3) பொய்யாகப் புனையப்பட்ட புகாரின் அடிப்படையில் கே.பாலபாரதி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை உடன் ரத்து செய்திட வேண்டும்.
4) பெண்கள் மீது தாக்குதல் தொடுத்தது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ராணி அளித்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்திட தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் அக்கடித்ததில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago