தேசிய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற வேண்டும்: அமைச்சர் மெய்யநாதன்

தேசிய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பதினோராவது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நாளை (டிசம்பர் 11-ம் தேதி) நடைபெறவுள்ளது. இதில் தமிழக அணி சார்பில் கலந்துகொள்ள 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர், மருத்துவ உதவியாளர் என 4 பேர் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில் தேர்வான வீரர்களை அரசு சார்பில் ஊக்குவிக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வீரர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:

"இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக வீரர்கள் இடம் பெற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது. எனவேதான் வீரர்களுக்கு சரியான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 18 பேர் முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அனைத்துவிதமான விளையாட்டு வீரர்களும் நேர்மையாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உலக அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிலம்பம் போட்டிகளைப் பள்ளி அளவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விளையாட்டு அரங்கம் 25 தொகுதிகளில் உள்ளன. விரைவில் 209 தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டவுடன் உள்ளரங்க விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிக்குத் தமிழக வீரர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெறவுள்ளன."

இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE