முப்படைகளின் தளபதி வருகையால் நீலகிரி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது: டிஜிபி சைலேந்திர பாபு

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு வரும்போது மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேர் வந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. அப்போது நஞ்சப்பசத்திரம் மக்கள், தீயணைப்பு மற்றும் காவல்துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழக காவல்துறை இயக்குநர் சி.சைலேந்திரபாபு நஞ்சப்பசத்திரத்தில் மக்களை சந்தித்து, அவர்களின் சேவையை பாராட்டினார். மேலும், அவர்களுக்கு கம்பளி வழங்கினார்.

பின்னர் அவர் கூறும் போது, ‘ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட போது இப்பகுதி மக்கள் உரிய நேரத்தில் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மேலும், தங்கள் வீடுகளிலிருந்து போர்வைகள் மற்றும் பொருட்களை கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களது சேவை பாராட்டதக்கது. இதனால், அவர்களுக்கு குன்னூர் சார் ஆட்சியர் மற்றும் காவல்துறை சார்பில் கம்பளிகள் வழங்கப்பட்டன.

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு வருகிறார் என்பதால், மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அவரது வான் வழி பயணம் என்றாலும், சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தீவிர கண்காணிப்புப்பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

விபத்து தொடர்பாக கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இது வரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது’ என்றார்.

இந்நிலையில், இரண்டாம் நாளாக முப்படைகள் சார்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE