ஆய்வக உதவியாளர்களை 4 மாதம் ஊதிய பாக்கியுடன் விடுவிப்பதா?- தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு அறிவிக்காத நிலையில், தமிழக அரசு, ஆய்வக உதவியாளர்களை 4 மாத ஊதிய பாக்கியுடன் விடுவிப்பது கண்டிக்கத்தக்கது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற அளவில் ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளைப் படித்த தமிழக இளைஞர்களுக்கு வழங்கிட திமுக தீவிர முயற்சி கொள்ளும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள், அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என்ற வரிசையில் தற்போது கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களைப் பணியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை திமுக அரசு எடுத்திருக்கிறது.

கரோனா தொற்று முதல் அலையின்போது, 2020-ம் ஆண்டு மூக்கு மற்றும் தொண்டைப் பகுதி ஆகிய இரண்டிலிருந்து சுரக்கும் நீரைச் சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இளம் வயதினரான ஆய்வக உதவியாளர்கள் தங்கள் - உயிரை துச்சமென மதித்து, கரோனா நோய்த் தொற்று உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் வீடு வீடாகச் சென்று பரிசோதனைக்கான மாதிரியைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது மட்டுமல்லாமல் தரவுகளைப் பதிவு செய்தல், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் போன்ற பணிகளையும் உதவியாளர்கள் மேற்கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில், திடீரென்று நவம்பர் 30-ம் தேதி சுகாதாரத் துறை துணை இயக்குநர் 'இன்றுதான் உங்களின் கடைசிப் பணி நாள்' என்று தெரிவித்து, டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பணிக்கு வரத் தேவையில்லை என்று ஆய்வக உதவியாளர்களுக்குத் தகவல் தெரிவித்ததாகவும், தங்களுடைய மாத ஊதியம் 8,000 ரூபாய்தான் என்றும், அதைக்கூட நான்கு மாதங்களாக அரசு தரவில்லை என்றும், இதன் காரணமாகத் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் மாற்றம் வரும் என்று நினைத்த தங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது என்றும், வேலை செய்ததற்கான ஊதியம் கிடைக்காததோடு, பணி நீக்கத்திற்குத் தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், பணியிலிருந்து விடுவிப்பது குறித்து முன்கூட்டியே தகவல் சொல்லியிருந்தால் வேறு வேலையைத் தேடிக் கொண்டிருப்போம் என்றும் ஆய்வக உதவியாளர்கள் தெரிவிப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதனை எதிர்த்து 150 ஆய்வக உதவியாளர்கள் சென்னையிலுள்ள மருத்துவப் பணிகள் இயக்ககத்தின் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆய்வக உதவியாளர்கள் கரோனா தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் மாதிரிகளைச் சேகரிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்டனர் என்றும், அந்தத் தேவை தற்போது குறைத்துவிட்டது என்றும், தற்போது கணிசமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுவிட்டதால் வீடு வீடாகச் சென்று மாதிரிகளைச் சேகரிக்கும் பணி தீவிரமாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், 1,500 ஆய்வக உதவியாளர்களைப் பணியில் வைத்திருக்க முடியாததற்கும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கும் காரணம் நிதிப் பற்றாக்குறைதான் என்றும் தெரிவிக்கின்றனர்.

கரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பினை மத்திய அரசு அறிவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு ஆய்வக உதவியாளர்களை எவ்விதக் கால அவகாசமும் தராமல் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிப்பதும், நான்கு மாதங்களுக்கான ஊதியத்தைத் தராமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, போராடுகின்ற தற்காலிக ஆய்வக உதவியாளர்களை அழைத்துப் பேசி உதவியாளர்களின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றவும், அவர்களுக்குத் தரவேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்