காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவையொட்டி மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. 
தமிழகம்

முப்படை தலைமை தளபதி மறைவுக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரங்கல்

செய்திப்பிரிவு

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சார்பில் மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு:

பாரத தேசத்தின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அகால மரணம் அடைந்திருப்பது துரதிருஷ்டவசமானதாகும். இவர்களது மறைவு நமது நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஜெனரல் ராவத் நமது நாட்டின் ராணுவத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பல உயரிய நிலைகளில் மிகத் திறம்பட பணியாற்றியவர். இந்திய ராணுவத்தின் முதல் முப்படைத் தளபதி என்ற பெருமைக்கு உரியவர். அவருடைய தியாகமும் நாட்டுக்காக அவர் செய்த சேவைகளும் எதிர்கால தலைமுறையினரால் என்றென்றும் நினைவில் இருக்கும்.

விபத்தில் மறைந்த அனைவரது ஆன்மாகவும் முக்தி அடைவதற்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்ச தீபம்

பிபின் ராவத் உள்ளிட்டோரின் ஆன்மா சாந்தி அடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள கிழக்கு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

SCROLL FOR NEXT