மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஈடுகட்டுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால், அது ஏற்கெனவே பெரும் துயரத்தில் இருக்கும் மக்களுக்குக் கூடுதல் துயரத்தை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிக்குள் உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதாகவும், அதன்படி மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கான நடைமுறைகளைத் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கக்கூடும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத் தன்மையைத் தமிழக அரசுதான் தெரிவிக்க வேண்டும்.
» நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் தகவல்
» பிபின் ராவத் மரணம்: ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதை ஆராய தடயவியல் குழு குன்னூர் வருகை
ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அப்போதைய நிதித்துறைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரு தகவல்களையும் வைத்துப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுமோ? என்ற ஐயமும், கவலையும் எழுகிறது.
கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். சாதாரணமான தொழிலாளர்கள் முதல் அமைப்பு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் வரை பலரும் வேலை இழந்துள்ளனர். பெரும்பான்மையான பணியாளர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு என்ற பேச்சுக்கே கடந்த இரு ஆண்டுகளாக வாய்ப்புகள் இல்லை. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு கூட தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் பெய்த மழை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களை அடியோடு துடைத்துவிட்டது.
தமிழ்நாட்டில் தொடர்மழை ஓய்ந்து விட்டாலும் அதன் பாதிப்புகள் இன்னும் விலகவில்லை. காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் வாழ முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டால், அதுவும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தேசித்துள்ளவாறு, 20% உயர்த்தப்பட்டால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகிவிடும். அதை அரசு தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிக இழப்பில் இயங்குவதும், அதற்கு இணையான கடன் சுமை இருப்பதும் உண்மைதான். ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கு தேவை நிர்வாக சீர்திருத்தங்கள் தானே தவிர, மின்சாரக் கட்டண உயர்வு அல்ல. நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ஓட்டை வாளியில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமமான செயலாகவே இருக்கும். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2014-15ஆம் ஆண்டில் ரூ.12,750 கோடி இழப்பைச் சந்தித்தது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மின்சார வாரியத்தின் இழப்பு 2015-16ஆம் ஆண்டில் ரூ.5,750 கோடியாகவும், 2016-17 ஆம் ஆண்டில் ரூ.4,350 கோடியாகவும் குறைந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து மின்வாரியத்தின் இழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அதற்குக் காரணம் மின்சார வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகளும், அதிக தொகைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதும்தான் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின்னுற்பத்தியை அதிகரிப்பது, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, மத்திய நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் மின்சாரத்தைக் குறைந்த கட்டணத்தில் வாங்குவதுதான் இன்றைய சூழலில் மின்வாரியத்தை லாபத்தில் இயக்கச் செய்வதற்கான சரியான நடவடிக்கைகளாக இருக்கும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடனுக்காக ஆண்டுக்காக ரூ.16,000 கோடி வட்டி கட்டப்படுகிறது. அதைத் தவிர்த்தாலே மின்வாரியத்தின் இழப்பை கணிசமாகக் குறைத்துவிட முடியும். இவற்றையெல்லாம் செய்யாமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் துயரங்கள்தான் அதிகரிக்குமே தவிர, மின்வாரியத்தின் துயரங்கள் தீராது.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில் திமுக அரசுக்கும் உடன்பாடு இருக்காது என்றே கருதுகிறேன். அதனால்தான் ஆண்டுக்கு ரூ.6,000 வரை பயன் கிடைக்கும் வகையில், மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; மின்சாரக் கட்டணத்துடன் ரூ.50 வரை நிலைக் கட்டணம் வசூலிக்கும் முறை கைவிடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதனால், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தால் அதைக் கைவிட வேண்டும். இதுகுறித்த நிலைப்பாட்டைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago