ஆர்.டி.சிவசங்கர்
நீலகிரி மாட்டம் காட்டேரி அருகில் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்துகாணப்படும் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ளமக்கள் பெரும்பாலும் தேயிலைத்தோட்டங்களுக்கு வேலைக்குச்சென்று வருகின்றனர். இப்பகுதியில், கடந்த ஒரு மாதமாக சீதோஷ்ணநிலை வழக்கத்தைவிட மாறுபட்டுகாணப்பட்டது. தொடர்ந்து பனிமூட்டமும், சாரல் மழையும் காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் மிகக் குறைவாகவேஇருந்துள்ளது குறிப்பாக, கடந்த2 நாட்களாக வழக்கத்தைவிடபனிமூட்டம் கூடுதலாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக சூலூர் விமானப் படைத்ததளத்தில் இருந்து குன்னூர்வெலிங்டன் ராணுவ பயிற்சிமையத்துக்கு வரும் ராணுவ ஹெலிகாப்டர்கள், மேட்டுப்பாளையம், காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட வான்வெளித் தடத்தின் வழியாகத்தான் வரும். அதன்படியே நேற்றும் சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் வந்துள்ளது. ஆனால், காட்டேரிப் பூங்கா அருகே வந்தபோது, விபத்தில் சிக்கியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை காட்டேரிப் பூங்கா நஞ்சப்ப சத்திரம் பகுதியைச் சேர்ந்த சிலர் நேரில் பார்த்துள்ளனர். சிலர் சத்தம் கேட்ட பின்னர் வெளியே வந்து நடந்த சம்பவத்தை பார்த்துள்ளனர். முதலில் சாதாரணமான நிகழ்வு என நினைத்த மக்களுக்கு, சிறிது நேரத்துக்கு பின்னரே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதும், அதில் பயணித்தவர்கள் தீயில் கருகி கிடப்பதையும் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்க முயன்றனர்.
தாழ்வாக பறந்தது
காட்டேரிப் பூங்கா நஞ்சப்ப சத்திரம் பகுதியில் சில மணி நேரத்துக்கு ஒருமுறை வானிலை மாறி வருகிறது. இந்நிலையில், நேற்று கடும் பனி மூட்டம் நிலவியதால் வழக்கமான உயரத்தை விட, தாழ்வான உயரத்திலேயே ஹெலிகாப்டர் வான்வெளியில் பறந்து வந்துள்ளது. சூலூரில் இருந்து குன்னூர் வரும் ராணுவ ஹெலிகாப்டர்கள், நஞ்சப்ப சத்திரம் வனத்தை ஒட்டி, தாழ்வான பகுதியில் இருந்து மேலே ஏறி மலையைக் கடந்து குன்னூர் ராணுவப் பயிற்சி மையத்துக்குச் செல்லும். அதன்படி, நேற்று தாழ்வான நிலையில் இருந்து ஹெலிகாப்டர் மேலே ஏற இருந்தது. ஆனால், அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே, பனி மூட்டம் காரணமாக நிலைதடுமாறி, கீழே இருந்த மரத்தில் மோதியது.
அடுத்தடுத்து மரத்தில் மோதியது
முதல் மரத்தில் மோதிய வேகத்தில் ஹெலிகாப்டர் நிற்காமல்அடுத்தடுத்து இரண்டு மரங்களின் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது. வெடித்த வேகத்தில் உள்ளே இருந்தவர்கள், சிதறி கீழே விழுந்துள்ளனர். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் தீ விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்து, தங்களிடம் இருந்த பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
நெருப்பின் வேகம் அதிகமாக இருந்ததாலும்,ஹெலிகாப்டரில் எரிபொருள் இருந்ததாலும், தீ வேகமாக பரவியது. பொதுமக்களும் தீயணைப்புத்துறையினரும் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கு ஹெலிகாப்டர் தீயில்எரிந்துள்ளது. தீயின் வேகத்துக்கு ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் கருகினர். முதலில் 2 பேரை உயிருடன் மீட்டனர். அதைத் தொடர்ந்து சிதறி கிடந்த மற்ற 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
வீடுகளுக்கு அருகே விபத்து
ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் மிக நெருக்கமாக 10-க்கும்மேற்பட்ட வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த வரிசையில் கடைசியில் உள்ள வீட்டுக்கு மிக அருகில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. சில அடி தள்ளி விழுந்திருந்தால், அந்த வீட்டின் மீது விழுந்து உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து இருக்கும். நஞ்சப்ப சத்திரம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஜெயசீலன் கூறும்போது, ‘‘காலை 12.20 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை கண்டு, சக பொதுமக்களுடன் இணைந்து நான் அருகே செல்ல முயன்றேன். ஆனால், தீயின் வேகம்அதிகமாக இருந்ததால், உடனடியாக அருகே செல்ல முடியவில்லை. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களின் முனகல் சத்தம் கேட்டது. நாங்கள் இணைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றோம்’’ என்றார்.
தீயணைப்புத் துறையின் சிரமம்
காட்டேரிப் பூங்கா அருகே ஹெலிகாப்டர் விழுந்த நஞ்சப்ப சத்திரம் பகுதிக்கு வர ஏறத்தாழ 2 கி.மீ மீட்டர் தூரம் மலைப் பகுதியாக உள்ளது. இங்கு வாகனங்கள் வர முடியாது. இதனால் தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் தீயணைப்புத் துறையினர், குன்னூரில் இருந்து கன்னிமாரியம்மன் கோயில் வீதி வழியாக தனியார் தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்து, விபத்து நடந்த பகுதிக்கு வந்தனர். இருப்பினும், வாகனம் கீழே வர முடியாததால், கீழே உள்ள குடியிருப்பு பகுதியில், வீடுகளில் உள்ள குழாய்களில் தண்ணீரை டியூப் மூலம் பிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குன்னூர் சென்ற நிபுணர்கள்
விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதற்காக முதல்வரின் உத்தரவின்பேரில் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அறுவைசிகிச்சை நிபுணர், மயக்கவியல் நிபுணர், எலும்பியல் நிபுணர் ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் குன்னூர் சென்றனர். இதுதவிர, சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஒரு மருத்துவ குழுவினரும் புறப்பட்டுச் சென்றனர். அவசர உதவிக்காக கோவைசிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் ஒரு மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தை நேரில் பார்த்த கிருஷ்ணசாமி மற்றும் சந்திரகுமார் கூறும்போது, ‘நஞ்சப்ப சத்திரம் பகுதியில் காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. 12 மணியளவில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது. பலரின் அலறல் சத்தம் கேட்டது. நாங்கள் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தோம். பின்னர் தீயணைப்புத் துறை, போலீஸூக்கு தகவல் தந்தோம்’ என்றனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீக்காயங்களுடன் இருவரை மீட்டோம்
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தீக்காயங்களுடன் இருந்த இருவரை உயிருடன் மீட்டோம் என மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் கே.குமார் மற்றும் ச.ராமசந்திரன் கூறும்போது, ‘‘ராணுவ உயரதிகாரிகள் ராணுவ மையத்துக்கு வருவதால் வெலிங்டன் ஜிம்கானா பகுதியில் பணியில் இருந்தோம். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டோம். இருவரை உயிருடன் மீட்டோம். ஒருவருக்கு 40 சதவீதமும், மற்றவருக்கு 90 சதவீதமும் தீ காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago