பிபின் ராவத் மறைவு: அதிமுக, மதிமுக, தமாகா, மமக உள்ளிட்ட கட்சிகள் இரங்கல்

By செய்திப்பிரிவு

முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் இரங்கல் தெரிவித்துள்ளன.

அதிமுக இரங்கல்:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேச பக்தர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். அவருடன் பயணித்த நம் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றிய வீரர் பெருமக்கள் அவர்களுடைய மரணம் தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

விபத்தில் உயிரிழந்திருக்கும் தளபதி பிபின் ராவத், அவர் தம் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தோர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

வைகோ இரங்கல்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, 11 ராணுவ வீரர்கள் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஜெனரல் பிபின் ராவத், ஐ.நா. அமைதிப் படையில் பன்னாட்டு இராணுவ வீரர்கள் கொண்ட படைக்கு தலைமை வகித்து, காங்கோ நாடு சென்றார். பல களங்களில் அவரது போர்த் திறனும், துணிச்சலும் வெளிப்பட்டு இருக்கின்றன.

இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கவும், ராணுவக் கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதிலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது.
ஜெனரல் பிபின் ராவத் தனது பணிக் காலத்தில் திறம்படப் பணியாற்றியதால், உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் இரங்கல்:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராணுவத்துறையில் தனித்திறமையால் படிப்படியாக உயர் பணிகளுக்கு முன்னேறி உயர் அதிகாரியாக மிகச்சிறப்பாக செயல்பட்டவர்.

குறிப்பாக தீவிரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். நாட்டின் பாதுகாப்பில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த முப்படைகளின் தளபதியாக இவர் ஆற்றிய பணிகள் அர்ப்பணிப்பு மிக்க பணிகள்.

நாட்டின் முதல் முப்படை தளபதியாக பிபின் ராவத் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை நாட்டுக்காக உழைத்த சிறப்பு மிக்கவர்.
நாட்டு மக்களுக்காக, நாட்டுக்காக ராணுவத் துறையின் மூலம் அவர் மேற்கொண்ட பணிகள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
முப்படைகளில் பணிபுரியும் ஒவ்வொருவரும் மட்டுமல்ல நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் முப்படைகளின் தளபதிக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

தாய்நாட்டிற்காக முப்படைகளின் தளபதி பொறுப்பில் சிறந்து விளங்கிய முப்படை தலைமைத் தளபதி அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், ராணுவத்துறையில் பணிபுரிவோருக்கும் ஏன் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகும்.

விபத்தில் உயிரிழந்திருக்கும் முப்படை தலைமைத் தளபதி, அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப்படை வீரர்கள் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், ராணுவத்துறையில் பணிபுரிவோருக்கும் த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மமக இரங்கல்:

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்பாய் செயலாற்றியவர் பிபின் ராவத். அவரும் அவரது மனைவியும் இன்னும் பல முக்கிய அதிகாரிகளும் இந்த விபத்தில் இறந்தஇருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்து நடந்த இடத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஊர்திகளும் பணியாற்றி இறந்த உடல்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சேர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த இந்த உயர் அதிகாரிகளின் தியாகம்அளவிட முடியாதது. வீரமிக்க இந்த செம்மல்களின் குடும்பத்தாருக்கும் முப்படையினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்