மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா? முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும்: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா என்பது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையத்தில் வெளியிட வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"மின் நுகர்வோர்களிடமிருந்து வரும் புகார்களைப் பெற்று அவற்றை உடனுக்குடன் களையும் வகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் மையம், தற்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களிலும் வெளிப்படையான ஒப்பந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வந்தன. இந்த மையங்களில் புகார் தெரிவிக்க விரும்பும் மின் பயனீட்டாளர்கள் 1912 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம். இதுதவிர, மின்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்திலும், வாட்ஸ் அப் மூலமாகவும் புகார் அளிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு, தமிழ்நாடு ஒப்பந்தப் புள்ளி விதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வந்த மின் தடை புகார் மையங்களை ரத்து செய்துவிட்டு, அனைத்து புகார்களையும் ஒருங்கே பெறும் வண்ணம் மின்னகம் என்ற ஒரு தனித் தளத்தை அமைத்துள்ளதாகவும், மின்னக எண் 94987 94987 வாயிலாகப் பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் ஒரு முறைப் பணிக்கு 65 நபர்கள் வீதம் மூன்று முறைப் பணிகளுக்கு 195 பேர் பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திற்கு மூன்று பேர் வீதம் 44 மின் பகிர்மான வட்டங்களில் 132 பேர் பணியாற்றி வருவதாகவும், இதற்காக ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ரூ.12 கோடி செலவிடப்படுவதாகவும், இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், மின்னகப் பணியின் ஒப்பந்ததாரர் விவரம் குறித்தும் இணையதளத்தில் எந்தத் தகவலும் இல்லை என்றும், இதன் காரணமாக ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் வேலை இழந்துள்ளதாகவும், இந்தப் புகார்களை மட்டுமே கவனிக்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பராமரிப்புப் பணிகள் மற்றும் இதர சேவைகள் தாமதப்பட்டுப் பொதுமக்களுக்கு மின்சார வாரியத்தின் மீது அதிருப்தி நிலவுவதாகவும், இந்த அதிருப்தி மின்னகத்தின் வரும் புகார்கள் வாயிலாக வெளிப்படுவதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல், முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த உதவி செயற் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் எல்லாம் மின்னகப் பணி என்ற போர்வையில் முறைப் பணியாற்றும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே செயல்பட்டு வந்த 1912 என்கிற மின்தடை புகார் எண்ணில் தமிழ்நாட்டில் உள்ள 44 மின்தடை புகார் மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 12,000 புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில், அதனை முற்றிலும் மறைத்து, தற்போது பொறுப்பெற்றுள்ள அரசுதான் மின்தடை புகார் மையங்கள் மின்னகம் வாயிலாக உருவாக்கப்பட்டது போலவும், இதன் காரணமாக நாளொன்றுக்கு 8,000 புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்படுவது போலவும் சுய விளம்பரத்தைச் செய்து கொண்டிருப்பதாகவும், மின்னகம் என்ற போர்வையில் மூன்று கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோரது தரவுகள் அனைத்தும் ஊர், பெயர் தெரியாத திமுகவைச் சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

2003-ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கின்ற 1912 என்ற புகார் எண்ணை 'மின்னகம்' என்ற போர்வையில் 94987 94987 என மாற்றுவதற்கான காரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியிலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியிலும் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசிற்கு இருக்கிறது.

எனவே, முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, 'மின்னகம்' ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா என்பது குறித்த விவரங்களை வெளிப்படையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையத்தில் வெளியிடவும், ஏற்கெனவே பணிபுரிந்து வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பினை வழங்கவும், மின்னகம் தொடர்பாக மின்சார ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடையே நிலவும் அதிருப்தியைக் களையவும், மூன்று கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்களின் தரவுகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்