உயிரிழந்தவர்கள் பெயரில் தடுப்பூசி செலுத்தியதாகப் போலிப் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ்நாட்டில் இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கும், பல மாதங்களுக்கு முன்பே உயிரிழந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாகப் போலியாகப் பதிவுகள் செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய போலிப் பதிவுகள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ள போதிலும், இதுவரை செய்யப்பட்டுள்ள போலிப் பதிவுகள் நீக்கப்பட வேண்டியதும், போலிப் பதிவுகளின் எண்ணிக்கை கண்டறியப்பட வேண்டியதும் அவசியமாகும்.
கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமிதம் அளிக்கும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில், தடுப்பூசி போட்டதாகப் போலிப் பதிவுகள் செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்திருப்பது பெரும் ஏமாற்றமும், கவலையும் அளிக்கிறது. போலிப் பதிவுகள் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மூன்றாவது தரப்பின் குற்றச்சாட்டு அல்ல. மாறாக, இந்த முறைகேடுகளை அரசு பொது சுகாதாரத்துறையே கண்டறிந்து உறுதி செய்திருக்கிறது.
சென்னையில் பல மாதங்களுக்கு முன்பே உயிரிழந்த மூத்த குடிமகன் ஒருவர் பயன்படுத்திய செல்பேசிக்கு அக்டோபர் மாதத்தில் இரு குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அதில் அந்த செல்பேசியைப் பயன்படுத்திவரும் இருவருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பே தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரின் செல்பேசி எண்ணைப் பயன்படுத்தி மூவருக்குத் தடுப்பூசி போடப் பட்டதாக போலிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகப் பதிவு செய்துள்ள பலருக்குத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாகக் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாகப் பொது சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு சாத்தியமில்லாத இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதை எட்ட முடியாது என்பதால்தான் சுகாதாரப் பணியாளர்கள் போலிப் பதிவுகளைச் செய்தார்கள் என்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாகச் செய்திகள் வந்துள்ளன.
போலிப் பதிவுகளுக்கான காரணங்களையும், பின்னணியையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவையாக இருக்கும்; பல நேரங்களில் அந்த பாதிப்பைச் சரி செய்ய முடியாது. இதை உணராமல் சுகாதாரத்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் செயல்படக் கூடாது.
உயிரிழந்தவர்களின் செல்பேசி எண்ணைப் பயன்படுத்தி போலிப் பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அது குற்றம்தான் என்றாலும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. அதே நேரத்தில், ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரின் செல்பேசி எண்ணைப் பயன்படுத்தி போலிப் பதிவுகள் செய்யப்பட்டிருந்தால், கடைசியாக அந்த எண்ணைப் பயன்படுத்தி யாருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அதற்கான தடுப்பூசி சான்றிதழை மட்டும்தான் பதிவிறக்கம் செய்ய முடியும். அதனால், உண்மையாகவே அந்த செல்பேசி எண்ணை வைத்திருப்பவர் அவருக்கான தடுப்பூசி சான்றிதழைப் பதிவிறக்க முடியாது.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளவர்களின் செல்பேசி எண்ணைப் பயன்படுத்தியும் போலிப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர் போட்டுக்கொண்டதாகப் பதிவு செய்யப்பட்டால், அவரால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. இது மிகவும் கொடுமையானது. ஒருவர் செய்யாத தவறுக்காக அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பைப் பறிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அனைவருக்கும் விரைவாகத் தடுப்பூசி போட வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியானதுதான். ஆனால், அதற்காக சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து களப் பணியாளர்களுக்குத் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவது சரியல்ல. அதுமட்டுமின்றி, இலக்கை எட்டாத சுகாதாரப் பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணைகளும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அதனால்தான் சுகாதாரப் பணியாளர்கள் இத்தகைய குறுக்கு வழிகளைப் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.
தடுப்பூசி போடுவதற்கு சாத்தியமற்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டது எவ்வளவு தவறோ, அதை விடத் தவறு அதைக் காரணம் காட்டி போலிப் பதிவுகள் செய்யப்பட்டது ஆகும். கரோனா தடுப்பு தொடர்பான முக்கியமான விஷயத்தில் இதுபோன்ற குற்றங்களை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் போலித் தடுப்பூசிகள் போடப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தெந்த செல்பேசி எண்களைப் பயன்படுத்தி போலிப் பதிவுகள் செய்யப்பட்டனவோ, அவை அனைத்தையும் நீக்கி யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து விரிவான வெள்ளை அறிக்கையையும் தமிழக மருத்துவத்துறை வெளியிட வேண்டும். வருங்காலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயிப்பதை அரசு கைவிட வேண்டும்."
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago