காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் ஆசையை நிறைவேற்றிய மனைவி; ராணுவ அதிகாரியாக தேர்வாகி சாதனை: ராணுவத்தின் தன்னலமற்ற சேவை, மனிதாபிமானத்தால் நெகிழ்ச்சி

By ப.முரளிதரன்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி, கணவரின் விருப்பப்படி ராணுவ அதிகாரியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓடிஏ) சமீபத்தில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பெண் அதிகாரி ஜோதி தீபக் நைன்வால். 2 குழந்தைகளுக்கு தாயான அவர், ராணுவத்தில் பணியில் சேர்ந்ததன் மூலம், இறந்ததனது கணவரின் ஆசையை நிறைவேற்றிக் காட்டியுள்ளார்.

இதுகுறித்து ஜோதி தீபக் நைன்வால் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

என் சொந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். திருமணத்துக்கு பிறகுசராசரி குடும்பத் தலைவியாக வாழ்க்கையை தொடங்கினேன். அன்பான கணவர்தீபக் குமார் நைன்வால், 2 அழகான குழந்தைகள் லாவண்யா, ரேயான்ஷ் என வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.

ஆனால், கடவுள் எனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றப் போகிறார் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. அது என் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத இழப்பையும், அதேநேரம், ஒரு மிகப் பெரிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது.

கணவர் தீபக் குமார் 2003-ம் ஆண்டுராணுவத்தில் சிப்பாயாக பணியில் சேர்ந்தவர். பின்னர், தனது திறமையால் படிப்படியாக உயர்ந்து, ஜம்மு காஷ்மீர் ராஷ்ட்ரீய ரைஃபிள் படையில் பணியமர்த்தப்பட்டார்.

2018-ம் ஆண்டு ஏப்.11-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் குண்டடிபட்டு படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை உடனடியாக டெல்லி ராணுவமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர்,அங்கிருந்து புனேயில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உடன் இருந்து அவரை கவனித்துக் கொள்வதற்காக, அப்போதுதான் முதல்முறையாக நான் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டு, டெல்லிக்கு சென்றேன்.

முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டிருந்ததால், கை, கால்களில் உணர்வு இழந்து படுத்த படுக்கையாகிவிட்டார். இதைக் கண்டு நொறுங்கிப் போய்விட்டேன். ஆனாலும், அஞ்சி அழவில்லை. மருத்துவர்கள் எதிரே நான் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டதால், கணவரை உடன்இருந்து பார்த்துக் கொள்ள அனுமதித்தனர். சுமார் 40 நாட்கள் அருகே இருந்து கவனித்தேன். ஆனாலும், 2018 மே 20-ம் தேதி அவர் எங்களைவிட்டு பிரிந்தார்.

ராணுவ மருத்துவமனையில் என் கணவருடன் இருந்தபோது, ராணுவத்தினர் எங்களிடம் காட்டிய மனிதாபிமான செயல்கள் என் மனதை தொட்டன. அப்போதுதான் ராணுவத்தின் தன்னலமற்ற தியாக சேவையை பரிபூரணமாக உணர்ந்தேன். ராணுவம் தனது வீரர்களை மட்டுமல்லாது, வீரர்களின் குடும்பத்தினரையும் சேர்த்து கவனித்துக் கொள்கிறது என்பதை அந்த தருணத்தில் உணர்ந்தேன். அதன் பிறகுதான், நானும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.

எனினும், நான் விதவை என்பதே சமூகத்தின் பார்வையாக இருந்தது. தவிர, எங்கள் குடும்பத்தினர் பழமைவாத எண்ணம் கொண்டவர்கள். கணவரின் மறைவுக்குப் பிறகு குழந்தைகளை கவனித்து அவர்களை கரைசேர்க்க வேண்டும் என்றே அனைவரும் நினைத்தனர்.

ஆனால், என் தாய் மட்டும் வேறுமாதிரியான சிந்தனையை கொண்டிருந்தார். அவர் என்னிடம், ‘‘கணவர் இறந்ததை நினைத்து வருந்தாதே. இதை இறைவன் உனக்கு அளித்த வாய்ப்பாக எடுத்துக்கொள். உன்பிள்ளைகள் இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் நீண்டகாலம் வாழவேண்டும். எனவே, உனது வாழ்க்கை அவர்களுக்கு ஒரு பரிசாக அமைய வேண்டும். உன்னைத்தான் அவர்கள் பின்பற்றுவார்கள். எனவே, உன் வாழ்க்கையை எவ்வாறுவழிநடத்தப் போகிறாய் என்பதை நீதான்முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களைபற்றி கவலைப்படாதே’’ என்றார். அவரது வார்த்தை என்மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

கணவர் இறந்த ஒருசில நாட்களில் நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, ‘‘எஸ்எஸ்பி தேர்வில் பங்கேற்க எனக்கு கல்வித் தகுதி இருப்பதாக கூறினார். எஸ்எஸ்பி என்ற வார்த்தைக்கு அர்த்தம்கூட அப்போது எனக்கு தெரியாது. அது ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் தேர்வு வாரியம் என்று பிறகுதான் தெரியவந்தது.

‘‘என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், நீ ராணுவத்தில் சேர வேண்டும்’’ என்று என் கணவர் ஏற்கெனவே கூறியதுநினைவுக்கு வந்தது. கணவரின் ஆசைப்படி,ராணுவப் பணிதான் என் எதிர்காலம் என்றுதீர்மானித்து, ராணுவத் தேர்வில் பங்கேற்கதயாரானேன். தேர்வுக்கு தயாராக ராணுவஅதிகாரிகள் சீமா, எம்.பி.சிங் பல விதத்திலும்உதவினர். அவர்கள் அளித்த ஊக்கமும், என் கடின முயற்சியும் என்னை ராணுவ அதிகாரி ஆக்கியுள்ளது. என்னைப் போலபாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக, நம்பிக்கையுடன் செயல்பட்டால் அவர்களும் உயர்ந்த நிலையை எட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்