காட்பாடி காந்திநகர் பகுதியில் அபாயகரமான கட்டிடத்தில் பாதுகாப்பில்லாத 60 ஆயிரம் புத்தகங்கள்: டிஜிட்டல் நூலகமாக மாற்றி கட்டித்தர வாசகர்கள் கோரிக்கை

By வ.செந்தில்குமார்

காட்பாடி காந்திநகரில் அபாயகர மான கட்டிடத்தில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் 60 ஆயிரம் புத்தகங்களுடன் இயங்கிவரும் ‘அறிஞர் அண்ணா’ கிளை நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டி டிஜிட்டல் நூலகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் காங்கேயநல்லூர் செல்லும் சாலையில் ‘அறிஞர் அண்ணா கிளை நூலகம்’ இயங்கி வருகிறது. கடந்த 1965-ம் ஆண்டு பகுதி நேர நூலகமாக வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டு 1987-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டு முழு நேர கிளை நூலகமாக இயங்கி வருகிறது. இந்த நூலகத்துக்காக சுமார் 4,500 சதுரடி பரப்பளவில் கடந்த 1990-ம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. நூலகத்தில் 5,700 பேர் வாசகர்களாகவும், 235 பேர் புரவலர் களாகவும் உள்ளனர்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் தொகுதியில் அவர் வசிக்கும் வார்டில் அமைந் துள்ள இந்த நூலகத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் சுமார் 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. தமிழக அரசின் போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமின்றி, ஆராய்ச்சி மாணவர்களுக்கான புத்தகங்களும் ஏராளமாக உள்ளன. ஏறக்குறைய 30 ஆண்டுகளை கடந்துள்ள இந்தநூலக கட்டிடம் தற்போது பழுதடைந்து அபாயகரமான நிலையில் இருக்கிறது. கட்டிட கூரையின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து பலமிழந்து காணப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் சிமென்ட் பூச்சு உதிர்ந்த கூரையில் தண்ணீர் ஒழுகுவதால் புத்தகங்களை பாதுகாப்பது நூலகர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. கட்டிடம் ஆபத்தாக இருப்பதால் வாசகர்களும் நூலகத்துக்கு வருவது குறைந்துவிட்டது. நூலகத்தில் ஏறக்குறைய 50 ஆண்டுகள் பழமையான புத்தகங்கள் இருப்பதால் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பது வாசகர்களின் கோரிக்கையாக உள்ளது.

திமுகவும் நூலகங்களும்...

பொதுவாகவே திமுக ஆட்சிக்காலங்களில் நூலகங்கள் புத்துயிர் பெறும். அனைத்து நூலகங்களிலும் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், புதிய புத்தகங்கள் வாங்குவது, வாசகர் வட்டத்தை பெருக்கும் செயல்கள் சுறுசுறுப்பாக இருக்கும். திமுகவினர் புத்தக பிரியர்களாகவும் இருப்பார்கள், இருக்கிறார்கள். இதற்கு காரணம், முன்னாள் முதல்வர்கள் அண்ணாவும், கருணாநிதியும் புத்தகங்கள் மீது தீரா காதல் கொண்டவர்களாக இருந்தார்கள்.

தமிழகத்தில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வரப்பெற்று ஊர்ப்புற நூலகங்கள் வரை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திமுகவுடன் நெருங்கி பயணப்படும் நூலகங்களில் ஒன்றாகவும் அறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்கி வரும் காந்திநகர் கிளை நூலகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

‘அறிஞர் அண்ணா’ கிளை நூலகத்தின் வாசகர் வட்ட தலைவர் பழனி கூறும்போது, ‘‘புத்தகப் பிரியரான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொகுதி யில் அமைந்துள்ள இந்த நூலக கட்டிடம் வாசகர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதை இடித்துவிட்டு புதிய நூலக கட்டிடம் கட்டி டிஜிட்டல் நூலகமாக கட்டிக்கொடுக்க வேண்டும். இந்த நூலகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த நூலகத்துக்கான விருதினையும் பெற்றுள்ளது.

கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால் தற்போதைய நிலையில் புத்தகங்களை ‘கோலன்’ வரிசையில் அடுக்கி வைக்க முடியவில்லை. கூரைகளில் ஒழுகும் மழை நீரில் இருந்து புத்தகங்களை பாதுகாக்க மொத்தமாக கொட்டி வைத்திருக்கிறோம். நூலகத்தில் இருக்கும் 60 ஆயிரம் புத்தகங்கள், 11 கணினிகளை பாதுகாத்து இந்த நூலகம் மீண்டும் புத்துயிர் பெறுவது நீர்வளத்துறை அமைச் சரின் கைகளில் உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்