'ஒமைக்ரான்' எனப்படும் உருமாறிய கரோனா பரவல் குறித்துப் பொதுமக்களுக்கு அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"கரோனா தொற்று நோயின் முதல் அலை, இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து மக்கள் ஓரளவு விடுபட்டு வந்து கொண்டிருக்கின்ற நிலையில், 'ஒமைக்ரான்' எனப்படும் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து, பல நாடுகளுக்குச் சென்று, தற்போது தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கே வந்துவிட்டது என்ற செய்தி ஒருவித அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய வகை தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது ஒவ்வொரு நாட்டிற்கும் கவலை அளிக்கக்கூடிய ஒன்று என்றும், இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும், இது பரவுவதை நாம் தொடர்ந்து அனுமதித்தால் கரோனா வைரஸ் தொற்று உட்பட அனைத்தும் அதனுடைய செயலைச் செய்யும் என்றும், இதுதான் அதனுடைய தன்மை என்றும், இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ் வகைகளில் 'ஒமைக்ரான்' மிகுந்த வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றும், மிகவும் ஆபத்தானது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
» தொடர் மழை; பள்ளி, கல்லூரிக் கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்க: வேல்முருகன்
» மழை குறைந்துவிட்டது; பள்ளிக்குப் போங்க தம்பி: மாணவரின் கோரிக்கையும் ஆட்சியரின் பதிலும்!
ஒமைக்ரானை சாதாரணமாகக் கருத வேண்டாம் என்றும், கவனமாக இருந்து, பாதிப்பையும் பரவலையும் - கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவின் தொற்றுநோயியல் நிபுணர் கருத்து தெரிவித்திருப்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தென் ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாளும் இதன் பாதிப்பு இரட்டிப்பாகிக் கொண்டே செல்வதாகவும், தற்போது உலக அளவில் 29 நாடுகளைச் சேர்ந்த 373 நபர்கள் 'ஒமைக்ரான்' எனும் உருமாறிய புதிய வகை கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முந்தைய தொற்றைவிட 500 விழுக்காடு அதிகமாகப் பரவக்கூடியது என்றாலும், இதுவரை ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததாகவும், இதுகுறித்து யாரும் பதற்றம் அடையவோ, அச்சப்படவோ வேண்டாம் என்றும், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணியருக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வரும் பயணியரைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கேற்ப தமிழக அரசும் 'ஒமைக்ரான்' வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், விமான நிலையங்களில் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனையின் முடிவில் கரோனா தொற்று இல்லை என முடிவு வந்தாலும், அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஒமைக்ரான் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும், இதன் பரவலைத் தடுக்க வேண்டுமானால் ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், காற்றோட்ட வசதியை மேம்படுத்தும் வகையில் - ஜன்னல்களைத் திறந்து வைத்தல், காற்றோட்ட வசதி இல்லாத அல்லது கூட்ட நெரிசல் இருக்கின்ற இடங்களைத் தவிர்த்தல், கைகளைக் கழுவுதல், அவர்களுடைய முறை வரும்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றைத் தனி நபர்கள் பின்பற்றுவதுதான் இந்தப் பரவலைத் தடுப்பதற்கான சிறந்த வழி என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் சர்வதேச விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டாலும், மறுபுறம் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தக்கூடிய பல காரணிகளைக் குறிப்பாக ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், காற்றோட்ட வசதியை மேம்படுத்தும் வகையில் ஜன்னல்களைத் திறந்து வைத்தல், காற்றோட்ட வசதி இல்லாத அல்லது கூட்ட நெரிசல் இருக்கின்ற இடங்களைத் தவிர்த்தல் ஆகியவற்றைப் பின்பற்றுவதில் தமிழ்நாட்டில் சற்று பின்னடைவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு.
தடுப்பூசி செலுத்துவதைப் பொறுத்தவரை முனைப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோர் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது, தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெலங்கானா மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வருகிறது.
எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, 'வருமுன் காப்பதே சிறந்தது' என்பதற்கேற்ப, ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்றுமாறு தகுந்த அறிவுரைகளை வழங்கி, அவை பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து அவர்கள் அதைச் செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வரும் வெளிநாட்டுப் பயணியரைக் கண்காணிப்பதிலும், அண்டை மாநிலங்களின் எல்லைகளில் கண்காணிப்பைக் கடுமையாக்குவதிலும் எவ்வித சுணக்கமும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago