தலைமன்னார் - ராமேசுவரம் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும்: இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

By எஸ்.முஹம்மது ராஃபி

தலைமன்னார்-ராமேசுவரம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை விரைவில் தொடங்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடல்சார் மற்றும் துறைமுக அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு விவாதத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் 24.02.1914 அன்று தொடங்கப்பட்டது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரே டிக்கெட்டில் வியாபாரிகள் பல்வேறு வகையான பண்டங்களையும், சரக்குகளையும் தனுஷ்கோடி ரயில் நிலையத்திற்குக் கொண்டுசென்று பிறகு அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் சென்று தலைமன்னாரில் இருந்து மீண்டும் ரயிலில் கொழும்பு வரையிலும் கொண்டு சென்றனர். கொழும்பிலிருந்து எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தமிழகத்திற்கு வாங்கி வந்தனர். இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பொருளாதார மற்றும் வியாபார வளர்ச்சி வளர்ந்தது.

1964-ம் ஆண்டு துறைமுக நகரமான தனுஷ்கோடி புயலில் அழிந்த பிறகு 1965-ம் ஆண்டிலிருந்து ராமேசுவரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கும் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 'ராமானுஜம்' என்ற பெயரிடப்பட்ட இந்தப் பயணிகள் கப்பலில் அதிகபட்சமாக 400 பேர் வரையிலும் பயணம் செய்யலாம். இதில் முதல் வகுப்புக் கட்டணம் ரூ.123, சாதாரணக் கட்டணம் ரூ.60 ராமேசுவரத்தில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாரத்திற்கு மூன்று நாட்கள் 'ஹவுஸ்ஃபுல்'லாகவே ராமானுஜம் கப்பல் தலைமன்னாருக்குச் சென்று வந்தது.

ராமேசுவரத்திலிருந்து தலைமன்னார் பயணித்த ராமானுஜம் கப்பல்

இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை யுத்தமாக மாறியதால் பாதுகாப்புக் காரணங்களாலும் கப்பல் போக்குவரத்து 1983-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் வணிக ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தோடு வறட்சியான மாவட்டங்கள் எனவும் பெயர் எடுத்தன.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 13.06.2011 அன்று தூத்துக்குடி-கொழும்பு இடையிலான ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற 9 அடுக்கு கொண்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு இரு நாட்டுப் பயணிகளால் அதிக வரவேற்பையும் பெற்றது. 1200 பயணிகள் வரையிலும் பயணிக்கக்கூடிய இந்தக் கப்பல் வாரத்தில் இரு நாட்கள் சேவையில் ஈடுபட்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் எதிர்ப்பைத் தொடர்ந்து 18.11.2011 அன்று கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

சென்னை எழும்பூரிலிருந்து கொழும்பு வரையிலுமான டிக்கெட்

சமீபத்தில் இந்தியா-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இரு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. மேலும் அரசு முறைப் பயணமாக இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே கடந்த நவம்பர் 21 அன்று ராமேசுவரம் வந்தார். அப்போது இந்தியா - இலங்கை இடையேயான மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை மாலை கடல்சார் மற்றும் துறைமுக அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்லஸ் நிர்மலநாதன் பேசும்போது, ''இலங்கையில் யுத்தத்திற்கு முன்பாக தலைமன்னார் - ராமேசுவரம் இடையே கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. இந்தக் கப்பல் போக்குவரத்து யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனால், யுத்தம் நின்ற போதிலும் அந்தக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவில்லை.

தலைமன்னார் - ராமேசுவரம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பான இந்தியத் தூதரகத்தோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்தியா மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க ஆயத்தப் பணிகளைச் செய்து வருவதாகவும் கப்பல் போக்குவரத்திற்கு இந்தியாவின் முழு ஆதரவு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இலங்கை அரசுத் தரப்பிலேயே தாமதப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக அரசு உடனடியாக கவனம் செலுத்தி இரு நாட்டுக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்