தமிழகத்தில் முதல் முறையாக, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னைப்பட்டியில் உள்ள கொன்னைக் கண்மாயில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய வணிகக் குழுவினரின் 10 நினைவுத் தூண்களுடன் கூடிய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், நிறுவனர், தொல்லியல் ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் தலைமையில் எம்.ராஜாங்கம், பீர்முகமது, ச.கஸ்தூரி ரங்கன், ஆ.கமலம் ஆகிய உறுப்பினர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வுப் பணியின்போது இதைக் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,
”சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருந்தோர், போர் வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோருக்கு முற்காலத்தில் நடுகல், வீரக்கல், நினைவுத் தூண் நடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அவ்வாறாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தனித்தனியாக இதுபோன்ற நினைவுத் தூண் குறித்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக ஒரே இடத்தில் 10 நினைவுத் தூண்களுடன் கூடிய கல்வெட்டுகள் கொன்னைப்பட்டியில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது இம்மாவட்டத்துக்கான கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.
» 132 ஆண்டுகளுக்குப் பின் மும்பை டெஸ்ட்டில் புதிய வரலாறு; 2 டெஸ்ட்டுக்கு 4 கேப்டன்கள்: புதிய சாதனை
இவற்றில், 9 கல்வெட்டுகள் மட்டுமே நன்றாக வாசிக்கும் நிலையில் உள்ளன. அவை, 5 முதல் 7 அடி உயரமும், அடியில் சதுர வடிவிலும், மேற்பகுதி எண் பட்டை வடிவத்துடனும் உள்ளன. இவற்றில் ஒன்றிலிருந்து 2 தொடர் பக்கங்களில் 30 செ.மீ. அகலம் முதல் 70 செ.மீ வரையிலான நீளத்துடன் ஒவ்வொரு கல்வெட்டிலும் அளவு மாறுபட்டுக் காணப்படுகிறது.
இக்கல்வெட்டுகள் 11-ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. அதாவது, 1,000 ஆண்டுகளுக்கு முந்ததைய அதாவது, ராஜேந்திர சோழரின் 10-ம் ஆட்சி ஆண்டு முதல் முதலாம் குலோத்துங்கனின் 8-வது ஆட்சி ஆண்டு வரை வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில், குன்றன் சா(த்தன்) என்ற பெயரில் 2 பேருக்கும், மருதன் செட்டி, கங்கை கொண்ட சோழ செட்டி, முத்தங் கஞ்சாறன் எனும் மும்முடி சோழ சிதிலட்டி, (பூ)லாங்குள(த்)தான், சிறப்பன் எனும் பெயர்கள் கொண்டவர்களுக்கும் நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது.
இவை வணிகர்கள் மட்டுமின்றி வீரர்களின் நினைவாக நடப்பட்டிருப்பதை “ஸ்ரீ இராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படை” என்று ஒரு கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. செட்டி, ஞெட்டி ஆகிய சொற்களும், ராஜேந்திர சோழரின் பெயரோடு கங்கை கொண்ட சோழ செட்டி, மும்முடி சோழ செட்டி என்று பெயர் சூட்டிக்கொண்டுள்ளதன் மூலமும் வணிகர்களோடு கொண்டிருந்த தொடர்பை அறியமுடிகிறது.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இவ்வூர் சோழர் கால வணிகக்குழுவில் மிக முக்கியப் பங்காற்றியிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது''.
இவ்வாறு மங்கனூர் ஆ.மணிகண்டன் தெரிவித்தார்.
மேலும், வரலாற்று முக்கியத்துவமிக்க இக்கல்வெட்டைப் பாதுகாக்க கொன்னைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சி.செல்வமணி முழுமையான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இதற்கு முன்பு, 2016-ல் செல்லுகுடியில் ராஜேந்திர சோழரின் பெயர் தாங்கிய வணிகக்குழு கல்வெட்டானது இக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது எனவும் மணிகண்டன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago