போட்டித் தேர்வில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம்: தமிழக அரசாணைக்கு வேல்முருகன் வரவேற்பு

By செய்திப்பிரிவு

போட்டித் தேர்வில் தமிழ் மொழித் தேர்வைக் கட்டாயமாக்கிய தமிழக அரசின் ஆணைக்கு மகிழ்ச்சி தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த அறிவிப்பின் வாயிலாக லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் பயன்பெறப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளான, ரயில்வே, விமானத்துறை, கப்பல் துறை, வங்கித்துறை, அஞ்சல்துறை, வருவாய் வரித்துறை, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனம், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, சேலம் உருக்காலை, ஆவடி படைக்கலன் தொழிற்சாலை என அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.

அதுபோதாதென்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு நடத்தும் தேர்வுகளை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் மற்றும் நேபாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் எழுத விண்ணப்பிக்கலாம் என்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, கடந்த 2016-ல் சட்டத்திருத்தம் செய்திருந்தது.

இத்தகைய நடவடிக்கை, தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள சுமார் ஒரு கோடி இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவைச் சிதைக்கும் என்றும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் கண்டித்திருந்தன. மேலும், அச்சட்டத்திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டன.

அதனையெல்லாம் புரிந்துகொள்ளாத அதிமுக அரசு கடந்த 2019-ல், மின்வாரியம், பொதுப்பணித்துறை, நியமனத்தில் தமிழே தெரியாத வெளிமாநிலத்தவர்களைப் பணியில் சேர்த்தது. குறிப்பாக, தமிழ்நாடு மின்வாரியத்தில் 325 துணை மின் பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் 38 பேர் தேர்வானார்.

இந்தத் தேர்வு முறையைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் போராட்டம் நடத்தியது. அதற்குப் பின்னர், 38 வெளிமாநிலத்தவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது. இத்தேர்வு முறை, லஞ்சத்தின் அடிப்படையில் நிறைவேறியது எனக் கூறப்பட்டாலும், தமிழனத்தின் மீது மோடி அரசுக்கு இருந்த இனப் பகையாலும், நயவஞ்சகத்தாலும் அரங்கேறியது என்பதை மறுக்க முடியாது.

மோடி அரசின் இத்தகைய சூழ்ச்சியால், சொந்த மண்ணிலேயே தமிழர் அகதிகள் மற்றும் அடிமைகள் ஆகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். குறிப்பாக, தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் இருண்டுவிடும் பேராபத்தைப் புரிந்து கொண்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இதற்காக, தமிழக அரசுப் பணிகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே என்றும் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகள் மற்றும் தனியார்துறைப் பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே எனச் சட்டம் இயற்றுமாறு என்ற முழக்கத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து விடுத்து வருகிறது.

இத்தகைய நடவடிக்கைக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இனி நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், தமிழ் தெரியாதவர்கள் இனி தமிழகத்தில் அரசுப் பணியில் சேர்வதைத் தடுக்கும் வகையிலும், தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலை, போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தாள் கட்டாயம் வகையிலும் அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த அறிவிப்பின் வாயிலாக லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் பயன்பெறப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலை, போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தாள் கட்டாயம் என்ற அரசாணையை, அடுத்தடுத்து வரும் அரசுப் பணியாளர்களுக்கான தேர்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிமாநிலத்தவர்களும் பணியில் சேரலாம் என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது."

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE