மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்படி வேலைவாய்ப்புகளை கூடுதலாக உருவாக்குவதற்கு பதிலாக இருக்கிற வாய்ப்பையும் மோடி அரசு பறிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “
கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்காகப் போராடும் லட்சக்கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
கரோனா பெருந்தொற்றில் இருந்து மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்க ஊட்டச்சத்தான உணவு, தடுப்பூசி ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கவும், பொது முடக்க காலத்தில் இழந்த கல்வி, வேலை வாய்ப்புகளை மீட்டுத்தரவும் உலக நாடுகளை கடந்த ஆண்டே ஐ.நா.சபை கேட்டுக்கொண்டபோதும், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகள், இதில் தோல்வி அடைந்ததையே காட்டுகின்றன.
உதாரணமாக, உணவுப்பாதுகாப்பு சட்டப்படி மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அந்தோதயா அன்ன யோஜன திட்டத்தின் கீழ் மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்க 2020 ஆகஸ்ட் மாதத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதற்காக மோடி அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காததால் நீதிமன்ற உத்தரவும் அமலாகவில்லை.
இதற்கு மத்தியில் பொதுமுடக்கத்தின் போது, அத்துறைக்கான நிதியை 2021-22 ஆண்டு பட்ஜெட்டில் கடந்த நிதி ஆண்டைவிட 12 சதவிகிதம் வெட்டியது. இதனால், போதிய உதவி உபகரணங்கள்கூட கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் தவிக்கின்றனர். புதிய உரிமைகள் சட்டம் அமலில் இருந்தும், அச்சட்ட விதிகளின்படி சம வாய்ப்பு, தடையற்ற சூழலை உருவாக்குதல் போன்றவற்றுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது.
வேலை செய்யும் வயதுடைய நாட்டின் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளில் சுமார் 65 சதவிகிதம் பேர் எவ்வித வேலையும் இல்லாதவர்கள் என புள்ளி விபரம் உள்ளது. மீதமுள்ள மிகப்பெரும்பகுதி மாற்றுத்திறனாளிகளும் அன்றாட அத்துக்கூலி, முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிலும் பெரும்பகுதியினர் பொது முடக்கத்தால் வாழ்வதாரத்தை இழந்து இப்போதும் தவிக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்டப்படி வேலைவாய்ப்புகளை கூடுதலாக உருவாக்குவதற்கு பதிலாக இருக்கிற வாய்ப்பிலும் மண்ணை அள்ளிப்போடும் வேலையை மோடி அரசு செய்கிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய ரிசர்வ், டெல்லி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட காவல்துறைகளில் சீருடை அல்லாத பணிகளை ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் செய்துவந்த நிலையில், சமீபத்தில் ஒரே உத்தரவில் தட்டிப்பறித்துள்ளது மோடி அரசு. வேலை வாய்ப்புகளை வழங்கிவரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளில் இட ஒதுக்கீடு கரைந்து கொண்டிருக்கிறது.
மோடி அரசின் இத்தகைய அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களை மாற்றுத்திறனாளிகள் ஒன்றுபட்டு தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து தீர்க்க, அவர்களின் உரிமைகளுக்காக மாநிலம் தழுவிய அளவில் செயல்படும் முக்கிய சங்கப் பிரதிநிதிகளை அவ்வப்போது அழைத்துப்பேசி தீர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மாத உதவித்தொகை அண்டை மாநிலங்களில் ரூ.3,000/-க்கும் மேல் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதை சமீபத்தில் முதலமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரில் சுட்டிக்காட்டி, அதனை உயர்த்த வலியுறுத்தியதை இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம். இயக்குனர் பதவியோடு சேர்த்து அல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியாக தனி ஆணையரை மாநில அரசு நியமிக்கவும் இந்நேரத்தில் வலியுறுத்துகிறோம்.
இதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் முன்னெடுக்கும் அனைத்து இயக்கங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக நிற்கும் என இந்த உலக தினத்தில் உறுதி அளிக்கிறோம். வாழ்த்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago