பொங்கல் பரிசுப் பையில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கருத்துத் திணிப்பு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கட்டணம் ரத்து, முதியோர் உதவித் தொகை உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம் என திமுகவால் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்று மக்கள் காத்திருந்த நிலையில், மக்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறான வகையில், 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில், இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளது தமிழக மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் விதமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டிலே பல நூற்றாண்டுக் காலமாக சித்திரை மாதப் பிறப்பு தான் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிரது. இந்த மரபினை சீர்குலைக்கும் விதமாக எவ்வித வலுவான ஆதாரமும் இல்லாமல், மக்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வழிவகை செய்யும் சட்டம் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், 2008 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
இந்தச் சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு சட்டம். இந்தச் சட்டம் சாதாரண மனிதனின் உரிமையைப் பறிக்கும் சட்டம் என்று அப்போதே மக்கள் சொன்னார்கள். பண்டிகை என்பது இதுநாள் வரை கடைபிடித்துவந்த முறைப்படி, மரபுப்படி, கலாச்சாரத்தின்படி, பழக்கவழக்கத்தின்படி கொண்டாடப்படுவது. இதற்கு எதற்குச் சட்டம்?

இதில் ஏன் அரசு தலையிடுகிறது? என்பதுதான் மக்களின் வாதமாக இருந்தது. எனவேதான், சட்டம் இயற்றப்பட்டும், தமிழ்நாட்டு மக்கள் சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) நீக்கச் சட்டமுன்வடிவை 23.08.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி சட்டமாக்கினார். இந்தச் சட்டத்தின்படி, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்ற ஆண்டைப் போல ரொக்கமாக ரூ.2,500 அரசு வழங்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்த சூழலில் இதுபோன்ற வெற்று அறிவிப்பு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதுவும் ஒருவிதமான கருத்துத் திணிப்பு. எந்தெந்த பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும், எப்பொழுது கொண்டாட வேண்டும் என்று முடிவு மக்களிடத்தில் தான் இருக்கிறது. அதை மக்கள் விருப்பப்படி விட்டுவிடுவது தான் நல்லது.

தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கையைப் பார்க்கும்போது, "தவறான ஒன்றை விடாப்பிடியாக பிடித்துக் கொள்வதற்குப் பதிலாக, கருத்தினை, எண்ணத்தினை மாற்றிக் கொள்வதே சிறப்பு" என்ற சாக்ரடீசின் தத்துவம் தான் என் நினைவிற்கு வருகிறது.

எனவே, தமிழக முதல்வர் மக்களின் உணர்ச்சிகளுக்கு, கருத்துகளுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடர்ந்திடவும், தமிழக மக்களின் நம்பிக்கைக்கு எதிராக பொங்கள் பையில் இடம்பெற்றுள்ள வாசகத்தை நிறுத்திடவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்